"COVID தொற்றை அரசியல் தேவைகளுக்காக அரசாங்கம் பயன்படுத்துகிறது"


 


அரசியல் தேவைகளை நிறைவேற்றவும் நெருங்கிய நண்பர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் COVID தொற்றை பயன்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

மூன்று COVID அலைகளின் போதும் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது COVID அலை ஏற்பட்டிருந்தபோது அரசாங்கம் பொதுத்தேர்தலுக்கு வேட்புமனு கோரியதாகவும் இரண்டாவது அலை தொடர்பிலான சுகாதார தரப்பினரின் முன்னெச்சரிக்கையையும் பொருட்படுத்தாது 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

COVID வைரஸ் பிறழ்வுகள் நாட்டில் பரவுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், அரசாங்கம் உக்ரைன் பிரஜைகளை அழைத்து வந்ததாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் பெருந்தொற்று நிலைமை குறித்து எவ்வித கரிசனையும் இன்றி செயற்படுவதற்கு இந்த நடவடிக்கைகள் ஆதாரமாக அமைந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூன்றாவது அலையில் முழு நாடும் சிக்கியுள்ள நிலையில், நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான போக்கை எடுத்தியம்புவதாகவும் அதனை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.