யார் இந்த 'ஹமாஸ்' டெய்ஃப்?


 


ஹமாஸ் குழுவினரின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், "அதிக விலை" கொடுக்க நேரடும் என இஸ்ரேலுக்கு மிரட்டல் விடும் ஹமாஸ் ஆயுதக் குழு உறுப்பினரின் ஆடியோ ஒன்று இந்த மாதம் வெளியானது.

ஹமாஸ் என்பது, காசாவை நிர்வகிக்கும் ஒரு பாலத்தீன ஆயுதக் குழு.

அந்த மிரட்டல் ஆடியோவில் இருந்த குரல் முகமது டெய்ஃப்-ன் குரல். இஸ்ரேல் ராணுவத்தின் பிடியிலிருந்து சிக்காமல் நழுவிக் கொண்டிருக்கும் ஹமாஸ் குழுவின் ராணுவப் பிரிவு தலைவர்.

டெய்ஃப் இஸ்ரேலால் தேடப்படும் ஒரு மனிதர். ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக தனது மெளனத்தை கலைத்துள்ளார்.

ஆனால் அவரின் எச்சரிக்கை அலட்சியம் செய்யப்பட்டது. இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் 11 நாட்கள் சண்டை நடந்தது. அதன்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

காசா தரப்பில் 242 பேர் கொல்லப்பட்டனர் என ஐநா தெரிவிக்கிறது. இஸ்ரேல் தரப்பில் மே மாதம் 10-21 ஆகிய தேதிகளில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

காசாவில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 129 பேர் பொது மக்கள் என ஐநா தெரிவிக்கிறது. இஸ்ரேல் ராணுவம் 200 பேர் ஆயுதக் குழுவை சேர்ந்தவர்கள் என்கிறது. தங்கள் உறுப்பினர்கள் 80 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.

"11 நாட்கள் சண்டையின்போது நாங்கள் தொடர்ந்து முகமது டெய்ஃபை கொல்ல முயற்சித்தோம்," என இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஹிடாய் சில்பெர்மென் நியூயார்க் டைமஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

டெய்ஃபை கொல்ல குறைந்தபட்சம் இரு முயற்சிகளாவது மேற்கொள்ளப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இதன்மூலம் இருபது வருடங்களாக ஏழு முறை ஒரு ஆயுதக் குழு தலைவர் தப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த எலியும் பூனையும் விளையாட்டு ஒரு கட்டத்தில் இஸ்ரேல் ராணுவத்தை கோபப்படுத்தியது. எனவே சமீபத்தில் நடந்த மோதலில் அவர்கள் ஹமாஸின் முக்கிய கமாண்டர்களை கொல்ல குறி வைத்தனர்.

காசாவில் மோதலில் சேதமடைந்த வீடுகள்

பட மூலாதாரம்,EPA

"ஹமாஸ் குழுவின் முக்கிய தலைவர்கள் என அவர்கள் நம்பும் அனைவரின் பட்டியலும் இஸ்ரேலிடம் இருந்தது" என பிபிசியிடம் தெரிவித்தார் மத்திய கிழக்கு பாதுகாப்பு ஆய்வாளர் மேத்யூ லெவிட். அந்த பட்டியலின் முதல் பெயர் முகமது டெய்ஃப்.

காசாவின் `விருந்தினர்`

நமக்கு முகமது டெய்ஃப் குறித்து தெரிந்ததெல்லாம் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனிய ஊடக செய்திகளை கொண்டுதான்.

அதன்படி டெய்ஃப் காசாவின் கான் யூனிஸ் முகாமில் 1965ஆம் ஆண்டு பிறந்தார். அப்போது அந்த பிராந்தியம் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

அவரின் இயற்பெயர் முகமது டியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, ஆனால் இஸ்ரேலிய வான் தாக்குதல்களை தவிர்க்க நாடோடி வாழ்க்கையை தேர்ந்தெடுத்ததால் அவர் டெய்ஃப் என்று அழைக்கப்படுகிறார். டெய்ஃப் என்றால் அரேபிக் மொழியில் விருந்தினர் என்று அர்த்தம்.

அவரின் வளர்ப்பு குறித்து வெகுசில தகவல்களே நமக்கு தெரியும்.

ஹமாஸ் உருவானபோது டெய்ஃப் இளைஞராக இருந்திருப்பார். அவர் 80களின் பிற்பாதியில்தான் ஹமாஸில் சேர்ந்தார்.

வரைப்படம்

இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபாடு காட்டியதால் டெய்ஃப் ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸிடின் அல் கசாம் ப்ரிகேடின் முக்கிய தலைவரனார்.

"அவர் கடும்போக்கு ஹமாஸ் அதிகாரியாக அறியப்பட்டார்." என்கிறார் முன்னாள் அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு ஆலோசகராக இருந்த லெவிட். ஹமாஸ் குழுவில் குண்டுகளை தயாரிப்பதற்கு புகழ்பெற்ற யெஹ்யா அயாஷ் போன்ற கமாண்டர்களுடன் டெய்ஃப் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அயாஷை `பொறியாளர்` என்று அழைப்பார்கள். அவர் 1990களின் முன் பகுதியில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த பேருந்து கொண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர் என குற்றஞ்சாட்டப்பட்டது.

அயாஷின் ஆதரவில் டெய்ஃப் இஸ்ரேலுக்கு எதிராக பல பழிவாங்கும் தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் டெய்ஃபின் தரவரிசையை அதிகரித்தது. குழுவில் அவருக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. 2002ஆம் ஆண்டு ஹமாஸ் ராணுவ பிரிவின் நிறுவனர் சலாஹ் ஷேஹடே கொல்லப்பட்டபின் ராணுவ பிரிவின் தலைவரனார் டெய்ஃப்.

ஒரு தலைவராக டெய்ஃப் ஹமாஸின் அடையாள ஆயுதமான காசம் ராக்கெட்டை வடிவமைத்தார் காசாவில் பதுங்கு டனல்களை உருவாக்கினார். இங்குதான் டெய்ஃப் தனது பெரும்பாலான நாட்களை கழித்துள்ளார். இங்கிருந்துதான் ஹமாஸின் நடவடிக்கைகளையும் வழிகாட்டி வந்தார்.

`ஒன்பது உயிர் கொண்ட பூனை`

டெய்ஃபை பொறுத்தவரை ஒரு வாழ்வா சாவா போராட்டமாகதான் இருந்துள்ளது.

2000ஆண்டின்போது இஸ்ரேல் நடத்திய நான்கு தாக்குதலில் அவர் காயங்களுடன் தப்பித்ததாக சொல்லப்படுகிறது. அதில் சில காயங்கள் பலத்த காயங்கள் ஆகும்.

இந்த தாக்குதல்களில்தான் அவர் தன் ஒரு கண்ணையும் மூட்டையும் இழந்துள்ளார் என இஸ்ரேலிய தரப்பு சொல்கிறது.

2006ஆம் ஆண்டு ஹமாஸ் குழுவின் உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் வான் தாக்குதல் நடத்திய பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரி டெய்ஃபின் காயங்கள் குறித்து உறுதிப்படுத்தினார்.

"அந்த தாக்குதலுக்கு பிறகு அவர் தலைவராக செயல்படமாட்டார் என எண்ணினர்." என இஸ்ரேலின் ஓய்வுப் பெற்ற ஜெனரல் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இருப்பினும் அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குணமடைந்தார். ஆனால் ஒரு கண் போனது போனதுதான்" என்கிறார்.

டெய்ஃப் ஹமாஸின் ராணுவப் பிரிவில் உள்ளார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாக்குதல்களில் தப்பித்ததால் அவர் தப்பித்து செல்வதில் வல்லவர் என புகழப்பட்டார். அவரின் எதிரிகள் அவருக்கு `ஒன்பது உயிர் கொண்ட பூனை` என்ற பட்டப்பெயரை வழங்கினர்.

2014ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையிலும் டெய்ஃப் ஐந்தாவது முறையாக உயிர் தப்பினார்.

காசாவின் அண்டை பகுதியான ஷேக் ரட்வானில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியது இதில் டெய்ஃபின் மனைவி விதாத் மற்றும் கைக்குழந்தை அலி ஆகியோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் அந்த தாக்குதலில் டெய்ஃபும் கொல்லப்பட்டார் என நினைத்தது ஆனால் டெய்ஃப் அந்த கட்டடத்தில் அந்த சமயத்தில் இல்லை.

உடனடியாக டெய்ஃப் உயிருடன் இருப்பதாகவும், ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்துவதாகவும் ஹமாஸ் தெரிவித்தது.

இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து தப்பித்து வருவதற்கு, தொழில்நுட்ப சாதனங்களை டெய்ஃப் அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

"நீங்கள் அலைப்பேசி வைத்திருக்கவில்லை என்றாலோ, கணினியில் இல்லை என்றாலோ நவீன உளவு சேவைகளால் உங்களை கண்டறிவது கடினமே" என்கிறார் லெவிட்.

ஹமாஸ் குழுவினர் உள்ள டனல்களின் ஆழம், காலாவதியான உளவு அமைப்பு, சேதாரம், ஆயுதங்கள் செயலிழப்பு ஆகிய காரணங்களால் தாக்குதல் முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கலாம் என இஸ்ரேல் உளவுத் துறையின் முன்னாள் தலைவர் தெரிவிக்கிறார்.

ஹமாஸின் `தனித்துவமான` தலைவர்

சண்டை முடிவுக்கு ஒரு நாள் முன்னதாக, காசாவில் ராணுவ நடவடிக்கைகளை டெய்ஃப் வழிநடத்துவதாக அசோசியேடட் பிரஸிடம் மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சண்டை முடிவுக்கு வந்ததிலிருந்து டெய்ஃப் பொறுப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஹமாஸின் ஏவுகணை தாக்குதலில் டெய்ஃப் பெரும் பங்கை ஆற்றியுள்ளதாக நம்பப்படுகிறது

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஹமாஸின் ஏவுகணை தாக்குதலில் டெய்ஃப் பெரும் பங்கை ஆற்றியுள்ளதாக நம்பப்படுகிறது

டெய்ஃப் குறித்த இஸ்ரேலிய நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் மேலதிக தகவல்களை கூற இயலாது என இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

டெய்ஃப் குறித்து இஸ்ரேல் இலக்கு வைப்பது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று கூறும் லெவிட், மேற்கொண்டு எந்த ஒரு இஸ்ரேலிய தாக்குதல்களிலும் டெய்ஃப் தப்பிப்பது அவர் தப்பித்தல் குறித்த கட்டுக்கதையை தான் அதிகரிக்கும் என்கிறார்.

"டெய்ஃப் பழைய நம்பிக்கைகளை கொண்ட ஒரு ஆள் என்பதாலும் ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்பதாலும் இஸ்ரேல் அவரை கொல்ல நினைக்கின்றன. தொடக்கத்திலிருந்து இருக்கும் தலைவர்கள் வெகுசிலரே அதில் டெய்ஃப் தனித்துவமானவர்." என்கிறார் லெவிட்.

அதை தவிர டெய்ஃப் ஒரு புதிரான மனிதராக உள்ளார். பிரபலமற்ற மற்றும் தலைமறைவான ஒரு நபர்.

காசாவின் தெருக்களில்கூட வெகுசிலரே டெய்ஃபை அடையாளம் காண்பர். சிலர் அவரின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பேசுவர். பாலத்தீனிய மக்கள் ஹமாஸின் பெரும்பாலான தலைவர்களால் ஈர்க்கப்பட்டதாக தெரியவில்லை என்று தரவுகளை காட்டி கூறுகிறார் லெவிட்.

இருப்பினும் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டபின் பாலத்தீனியர்கள் டெய்ஃபின் பெயரை முழங்கினர்.

காசாவின் இடிபாடுகளுக்கு மத்தியில் சண்டை நிறுத்தத்தை கொண்டாடிய சிலர் "ஆத்மாவுடனும் ரத்தத்துடனும் நாங்கள் உங்களை மீட்டுக் கொள்கிறோம் டெய்ஃப்" என்று பாடினர்.