அம்பாரை மாவட்டத்தில் ஆற்று மீனின் விலை சடுதியாக இரட்டிப்பாக அதிகரிப்பு


 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாரை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் ஆற்று மீனின் விலை சடுதியாக இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பயணத்தடை காரணமாக கடல் மீன்களின் வருகை மற்றும் விற்பனை குறைவடைந்த நிலையிலும் மீனுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையிலுமே இந்நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஆற்று மீனை விரும்பி உண்பவர்களின் விகிதம் அதிகமாகவுள்ள நிலையில் இந்நிலை உருவாகியுள்ளதால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதையும் அறிய முடிகின்றது.

இதேநேரம் ஆற்றிலும் களப்பிலும் மீன் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் அவ்வாறு மீன் பிடியில் ஈடுபடுகின்ற சிலர் மீனுக்கான விலையை அதிகரித்துள்ளதுடன் வெளியூர் வியாபாரிகளுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

சாதாரணமான காலப்பகுதியில் பிடிக்கப்படும் ஒரு கிலோ மீன் வியாபாரிகளுக்கு 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். அதனை வியாபாரிகள் 200 ரூபா தொடக்கம் 250 ரூபா வரை விற்பனை செய்வர். ஆனால் தற்போது சில மீன்பிடியாளர்கள் 250 ரூபா தொடக்கம் 300 ரூபா வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதுடன் மக்களிடம் 400 ரூபா வரையில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கு வெளியூர் வியாபாரிகளும் சில உள்ளுர் மீன் பிடியாளர்களுமே காரணம் என உள்ளுர் மீன் வியாபாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

பயணத்தடை மற்றும் கொரோனாவின் தாக்கம் காரணமாக தொழிலை இழந்துள்ள அன்றாட தொழிலாளர்களும் வருமானம் குறைந்த மக்களுமே இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவதோடு வெளியூர் வியாபாரிகளின் வருகையினை குறைப்பதற்கும் இதன் மூலம் மீனின் விலையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையிலும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீன் பிடிக்கப்படும் இடங்களுக்கு சென்று சுகாதார நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் மீனவர்களுக்கான ஆலோசனையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.