ஆலையடிவேம்பில், மேலதிகமாக 1000 தடுப்பூசிகளை எதிர்பார்க்கும் சுகாதாரத்துறை-


 
வி.சுகிர்தகுமார் 0777113659  



 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் நேற்று(24) மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இந்நடவடிக்கை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் நேற்று(24) முதல் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றது.
50 ஆயிரம் தடுப்பூசிகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் ஆலையடிவேம்பிற்கு 2500 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றது. ஆயினும் இன்றுடன் 2500 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்ட நிலையில் மேலதிகமாக 1000 தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார். இவை  இன்றும் நாளையும் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் தடுப்பூசிகளை பெற மக்கள் எதிர்பார்த்ததைவிட அதிக ஆர்வம் காட்டிவருவதாகவும் இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்நடவடிக்கைக்கு பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் முப்படைகள் மற்றும் ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகிய மூன்று நிலையங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
இதில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 12 வாரங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்;றும் 60வயதினை கடந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படுவதுடன் ஏனைய இரு நிலையங்களில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களை முன்னிலைப்படுத்தி பின்னராக 30 வயதை கடந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றது.
நேற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களும் தடுப்பூசியினை ஏற்றி கொண்டனர்.