மேக்லெவ் புல்லட் ரெயில், உலகின் அதிவேக ரெயில்


 
உலகின் அதிவேக ரெயிலை சீனா உருவாக்கி இருக்கிறது. இந்த ரெயில் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ரெயில் மேக்லெவ் புல்லட் ரெயில் என அழைக்கப்படுகிறது. இந்த ரெயில் சுமார் ஆயிரம் கிலோமீட்டரை கடக்க வெறும் 150 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதே தூரத்தை விமானத்தில் செல்லும்போது 180 நிமிடங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


வழக்கமான அதிவேக ரெயில்களுடன் ஒப்பிடும்போது இந்த ரெயில் பயண நேரத்தை மூன்று மணி நேரங்கள் வரை குறைத்துவிடுகிறது. இந்த ரெயில் எவ்வித சக்கரமும் இன்றி இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சக்கரங்களின் உதவியின்றி இந்த ரெயில் தரையின் மேல்பரப்பில் மிக நெருக்கமாக பறக்கிறது. இந்த ரெயிலில் சக்கரங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு மாற்றாக சக்திவாய்ந்த காந்தகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


 

மேக்லெவ் புல்லட் ரெயில்


இந்த காந்தகங்கள் ரெயிலில் உராய்வின்றி அதிவேகமாக முன்னேறி செல்கிறது. ரெயில் மற்றும் பாதை இடையே எவ்வித உராய்வும் இருக்காது என்பதால் வழக்கமான ரெயில்களுடன் ஒப்பிடும்போது இந்த ரெயில் அதிவேகமாக செல்கிறது. தற்போதுள்ள அதிவேக ரெயில்கள் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.


சீனாவில் இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ரெயில்களின் முதற்கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு உள்ளது.