இன நல்லிணக்க செயற்பாடுகளில்,பாகிஸ்தான் உதவ வேண்டும்!




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



இன நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று பாகிஸ்தான் உதவ வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் தெரிவித்தார்.

 இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் முஹம்மட் சாத் கத்தாக்   கலந்து கொண்ட இலங்கை - பாகிஸ்தான் நட்புறவுக்கான நிகழ்வு வெள்ளிக்கிழமை(2) இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் அவர்  தெரிவித்ததாவது

 இனநல்லிணக்கம்  தேசப்பற்று ஆகியவை மூலமே அழகிய அபிவிருத்தி அடைந்த சுபீட்ஷமான நாடாக இலங்கை உருவாக முடியும் எனவும்  இன நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று பாகிஸ்தான் உதவ வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.பொத்துவில் பிரதேசம் மூவின மக்களும் ஒன்றாக இணைந்து மகிழ்வோடு வாழ்கின்ற பிரதேசமாக உள்ளது. அதனடிப்படையில்  முழுநாட்டுக்கும் இன நல்லிணக்கம்  சகவாழ்வு ஆகியவற்றுக்கு முன்மாதிரியாக அது திகழ வேண்டுமென   விரும்புகின்றேன்.

பெருந்தொற்றுக் காலத்தில் அவதிப்படும மக்களுக்காக பாகிஸ்தான் அரசின் இலங்கைக்கான உதவிகளை மெச்சியதோடு  தொடர்ந்தும் இருநாடுகளுக்கிடையான பரஸ்பர உதவிகள் மூலம் வளமான தேசத்தை கட்டியெழுப்ப வாய்ப்புண்டாகும்  என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில்  பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப்பினால் பொத்துவில் எல்லைப் புற கிராமத்தில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை அமைத்துத் தருவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு அதற்கான செயற்றிட்ட வரைபுகள் ஆவணங்கள் என்பன உயர் ஸ்தானிகரிடம்  கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் முஹம்மட் சாத் கத்தாக் 

  பொறுமையோடு நாம் எதிர்நோக்கும் சவால்களை கையாள்கின்ற போது  சவால்களை எதிர்கொள்வதற்கான ஏதுக்கள் நம்முன்னே தோன்றத் தொடங்கும். இந்தப் பகுதியின் தேவைகள்  பிரச்சினைகள் பற்றிய தெளிவை எனது இந்தப் பயணத்தில் அறிந்து கொண்டேன். அதன்படி  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரபுடன் இணைந்து பொருத்தமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு தேவைகளை பூர்த்தி செய்ய கரிசனை காட்ட திடசங்கல்பம் பூண்டுள்ளேன் . சமூகத்தின் நல்லிணக்கமே மாற்றத்தின் அச்சாணியாய் இருப்பதாகவும்  வெவ்வேறு சமய தலைவர்கள் மேடையில் ஒன்றாக வீற்றிருப்பது அழகிய தோற்றமுள்ள நம்பிக்கை அளிப்பதாகவும்  தெரிவித்தார்.
 
நிகழ்வின் நிறைவில்  பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் பாராளுமன்ற உறுப்பினர்எஸ்.எம்.எம்  முஷாரபுடன்  இணைந்து உத்தேச வீடமைப்புத் திட்டம் இடம்பெற வேண்டிய இடத்திற்கான களவிஜயத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பொதிகள்  விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தருவன் அனுருந்த மற்றும் பொத்துவில் பிரதேச சபை  தவிசாளர் ஆ.ர். அப்துல் றஹிம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.