ஆலையடிவேம்பில் அன்ரிஜன் பரிசோதனை, இன்று மட்டும் முதியோர்கள் உள்ளிட்ட 13 பேர் தொற்றாளராக அடையாளம்


 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆலையடிவேம்ப பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் இன்றும் இடம்பெற்றது.
வருமுன் காப்போம் எனும் அடிப்படையில் குறித்த வயதிற்கு மேற்பட்டவர்களை கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இப்பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தலைமையிலான வைத்திய குழுவினர் இந்நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று மட்டும் முதியோர்கள் உள்ளிட்ட 13 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்போது பொதுமக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தற்போது எமது பிரதேசத்தில் கொடிய கொறணா நோயின் தாக்கம் மிகவும் வேகமாக அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இதன் காரணமாக எமது பிரதேசத்தில் கொறணா மரணங்களும் வெகுவாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும் அதிகமாக தாக்குவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனவே இவர்களை பாதுகாக்கும் பொருட்டு எதிர்காலங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துவதுடன் இவர்களின் நோய்த்தொற்றை இனங்காண்பதற்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இது இவர்களை கொடிய கொறணா நோயிலிருந்து பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் உயரிய முன்னெடுப்பாகும்.
எனவே, 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களை கொறணா நோயினை இனங்காண்பதற்கான அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுடன் தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டமையையும் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். எனவே தங்கள் வீட்டில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களை அழைத்து வந்து அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தி கொறணா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதனை உறுதிப்படுத்திக்கொள்வதுடன், அவ்வாறு தொற்றுக்குள்ளாகிய இருந்தால் ஆரம்பித்திலே கண்டுபிடிக்கப்பட்டு இலகுவாக நோயிலிருந்து தப்பித்து கொள்ள வைத்திய சிகிச்சை வழங்கப்படும் எனவும் இதன் மூலம் உங்களையும் இத்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுகொண்டார்.
இப்பரிசோதனை நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றுவரை 60 வயதிற்கு மேற்பட்ட 5 பேர்  தொற்றாளராக கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.