வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்டத்தில் தற்போது அடைமழை மீண்டும் பெய்து வருவதனால்  அறுவடை  செய்யப்பட்ட நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில்  உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.

இச்செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் ,சம்மாந்துறை, கல்முனை ,நாவிதன்வெளி  , நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம்   ஆகிய  பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் இச்செயற்பாடு தொடர்கதையாகவே உள்ளது.

அம்பாரை மாவட்டத்தில்  மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது  மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை  சந்தைப்படுத்துவதற்காக  விவசாயிகள்  தமது ஈரப்பதமான நெற்களை உலரவிடுவதற்காக இச்சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

குறித்த நிலைமை போதியளவு நெல் உலரவிடும் தளம் இன்மையால் வீதியில் தாம் இவ்வாறு  உலரவிடுவதாக  விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வீதிகளில் மூட்டை மூட்டைகளாக வீதிகளில் நெற்களை குவித்து உலர விடுவதனால் வீதியில் விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.இவ்வாறு உலர விடும் நெற்கள் ஒரு பக்க வீதியை தடைசெய்து உலரவிடுவதனால் இரு போக்குவரத்து வீதி தடைப்படுவதுடன் வீண் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளன.

தனிப்பட்ட சுயலாபத்திற்கான இவ்வாறான வீதிகளை பயன்படுத்தவது தண்டனைக்குரிய குற்றமாகும் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்வாறான சட்ட விரோதமாக வீதிகளில் நெற்களை உலரவிடுபவர்களுக்கு எதிராக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.