கவடாப்பிட்டி கிராமத்தில் குடிநீர் தாங்கி திறந்து வைப்பு வி.சுகிர்தகுமார் 0777113659 

  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கவடாப்பிட்டி மற்றும் மழவராஜன் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு இன்று ஓரளவு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இதற்கான முயற்சியை அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பு மேற்கொண்டதுடன் நிதியுதவியை கனடா நாட்டில் வசிக்கும் இளம் தம்பதியொன்று வழங்கி வைத்துள்ளது.

இதற்கமைவாக குறித்த கிராமத்தில் 170 அடி ஆளத்தில் இருந்து நீர் பெறப்படும் குழாய் கிணறு நீர் மூலம் பெறப்பட்ட குடிநீர் தாங்கி இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஆலம் விழுதுகள் அமைப்பின் இணைப்பாளர் சு.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாஸ்டர் தங்கராஜா கலந்து கொண்டு இறை ஆராதனையை மேற்கொண்டார்.

பின்னர் குழாய் கிணற்றின் நீர்தாங்கியை திறந்து வைத்தார்.

இதேநேரம் பொதுமக்கள் பாவனைக்கான குடிநீர் இணைப்புக்களும் திறந்து வைக்கப்பட்டன.

தொடர்ந்து அவ்விடத்தில் மரக்கன்றொன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கிராமத்தின் சார்பில் சி.சீதா மற்றும் எறிங்டன் அமைப்பின் உறுப்பினர்களான எஸ்.பிரபாகரன் எஸ்.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பல வருடங்களாக குடிநீர் பிரச்சினையை எதிர் கொண்டு வந்த சுமார் 70இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.