ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு,தாலிபான் பச்சைக் கொடி




 


காபூல்:


ஆப்கானிஸ்தானில் 2001ல் இழந்த ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி உள்ளனர். தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு பயந்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். இன்னும் பலர் வெளியேற காத்திருக்கின்றனர். தலிபான்களின் கையில் நாடு சென்றதால் கடுமையான அடக்குமுறைகளை அரங்கேற்றலாம் என மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

ஆனால் உலக நாடுகள் அனைத்துடனும் நாங்கள் நட்புறவு பாராட்ட விரும்புவதாகவும், ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழலாம் என்றும் தலிபான் அமைப்பு கூறி உள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கு தலிபான் அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் தலிபான் ஆட்சியில் சர்வதேச போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியாவுக்கு விளையாட அனுப்ப அனுமதி கிடைத்திருப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஹமித் ஷின்வாரி தெரிவித்துள்ளார். 

தலிபான்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது பல்வேறு விளையாட்டுகள் உள்ளிட்ட பெரும்பாலான பொழுதுபோக்கு அம்சங்களை தடை செய்தனர். விளையாட்டு மைதானங்களை, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனையை நிறைவேற்றும் அரங்கமாக பயன்படுத்தினர். தற்போது கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அந்த போட்டி வரும் நவம்பர் 27ம் தேதி தொடங்கி டிசம்பர் 1ம் தேதி வரை ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா செல்கிறது. ஆஸ்திரேலியாவில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.