சில பொருட்களின் விலைகளை அதிகரிக்க கோரிக்கை


இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை 200 ரூபாவினாலும் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவினாலும் தற்போதைய சூழ்நிலைக்கு அமைய அதிகரிக்க முடியும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

இத்தீர்மானங்களை வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவின் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர், சமர்ப்பித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பிலான இந்த யோசனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் பட்சத்தில் இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை உத்தியோகபூர்வமாக அதிகரிக்கப்படும்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்குமாறு பிரதான பால்மா இறக்குமதியாளர்களர்கள் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்தனர்.

தற்போதைய நிலையில் 350 ரூபாவினால் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை அதிகரித்தால் நுகர்வோர் பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொள்வார்கள் என்பதை கருத்திற் கொண்டு 200 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.