அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ குழுவினரின் பணி எப்போதும் இந்த சமூகத்திற்கு தேவை


 


(நூருல் ஹுதா உமர் , றிஸ்வான் சாலிஹு)


அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த இரண்டாவது கொவிட் தடுப்பூசி வழங்கலில் சுகாதார பிரிவினரோடு, அல்லும் பகலும் தங்களின் வேலைகளை ஒதுக்கி விட்டு இந்த சமூகத்தை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மிகவும் நேர்த்தியாக எங்களோடு தோழாடு தோழ் நின்று களப்பணியாற்றிய அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் " அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ குழுவினரின் பணி எப்போதும் இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டது என்று, நேற்று நடைபெற்ற நன்றி நவிலல் நிகழ்வொன்றில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி வழங்கலில் தங்களை முழு மூச்சாக அர்ப்பணித்த அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள், பட்டதாரி பயிலுணர்கள் இத்திட்டத்திற்கு சகல வழிகளிலும் உதவியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ குழுவினரால் ஏற்பாடு செய்த " களப்பணி செய்தவர்களுக்கு நன்றி நவிலல்" நிகழ்வு நேற்று (01) புதன்கிழமை மாலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ஹமீட் சேர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், பட்டதாரி பயிலுணர்கள், இப்பணிக்கு அயராது உழைத்த அனைவரும் பங்கு பற்றினார்கள்.

டாக்டர் காதர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

முதலாவது கொவிட் தடுப்பூசி வழங்கலில் நாங்கள் சிரமங்களையும் கஷ்டங்களையும் சந்தித்தோம். ஆனால் இரண்டாவது தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளுக்கு இறைவன் எங்களுக்கு இந்த அனர்த்த முகாமைத்துவ குழுவை தந்தது பெரும் உதவி மட்டுமன்றி எங்களின் பெரும்பாலான வேலைகளை இவர்களே பொறுப்பெடுத்து செய்ததினால் ஏனைய வேலைகளை நாங்கள் செய்வதற்கு உதவியாக இருந்தது.

இவர்களின் பணி இந்த ஊருக்கு மாத்திரமின்றி முழு சமூகத்திற்கும் தேவைப்பட்டது. இந்த குழுவில் கல்வியியலாளர்கள், மார்க்க அறிஞர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், தொழிலதிபர்கள், திட்டமிடலாளர்கள், சமூக தொண்டர்கள், இளைஞர் கழகங்களின் தலைவர்கள் என சமூகத்தை சதாவும் நேசிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் இருந்தமையினால் தான் இவர்களின் தேவை அனைவருக்கும் தேவைப்பட்டுள்ளதோடு, எனது காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ஏனைய சகலோருக்கும் இந்த பணியை மிகவும் திறம்படவும், இந்த கல்முனை பிராந்தியத்தில் சிறந்தொரு வலயமாக பெயர் வருவதற்கு உதவியை அனைவருக்கும், குறிப்பாக தனிப்பட்ட முறையில் பண உதவிகளை செய்தவர்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக டாக்டர் காதர் தெரிவித்தார்.