'நாகை மீனவன்' யூடியூபர் இலங்கைக்கு கஞ்சா கடத்தினாரா?



நாகையில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 270 கிலோ கஞ்சா, நாகை மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளால் பைபர் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 'நாகை மீனவன்' யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் குணசீலன் உட்பட நான்கு சந்தேக நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

நாகை துறைமுகம் அடுத்த கீச்சாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்த இருப்பதாக நாகை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த 10 நாட்களாக நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் கீச்சாங்குப்பம் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் கீச்சாங்குப்பம் ஆற்றங்கரையோரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில், நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர், மீன்பிடி பைபர் படகில் பெரிய அளவிலான பொட்டலங்களை படகின் ஐஸ்பெட்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

    வாழைப்பழ கூழுக்குள் ஒளித்து 1,000 கோடி ரூபாய் கொக்கைன் கடத்தல்
    3,000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்தியதாக சென்னை தம்பதி கைது - யார் அந்த டெல்லி புள்ளி?

அதை பார்த்த சுங்கத்துறையினர் அந்த நபர்களை படகுடன் சுற்றி வளைக்க முயன்ற போது கடத்தல்காரர்கள் 4 பேர் படகிலிருந்து ஆற்றில் குதித்து தப்பினர்.
கஞ்சா கடத்தல்
படக்குறிப்பு,

பறிமுதல் செய்யப்பட்ட நாகை மீனவன் படகுடன் அதிகாரிகள்

அந்த படகை அதிகாரிகள் சோதனை செய்த போது படகிற்குள் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பொட்டலங்களில் இருந்த 270 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு பைபர் படகையும் கைப்பற்றிய சுங்கத்துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு 'நாகை மீனவன்' என்கின்ற யூடியூப் சேனல் நடத்தும் மீனவருக்கு சொந்தமானது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 2 கோடி ரூபாய் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நாகை மாவட்ட சுங்கத்துறை கண்காணிப்பாளர் கழுகாசலமூர்த்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, கீச்சாங்குப்பம், வேளாங்கண்ணி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா, சமையல் மஞ்சள் கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்து வருகிறது.

தமிழக கடற்கரையில் இருந்து கடத்தி செல்லப்படும் கஞ்சா இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த நபர்கள் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் கைது செய்யப்படுபவர்களுடன் தொடர்பில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்கள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டு அவர்களை கைது செய்து வருகிறோம்.

கடத்தல் சம்பவங்களை தடுக்க கடற்கரை ஒரங்களில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த நபர்களிடம் ரகசிய தகவல்கள் பெறப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கடற்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கீச்சாங்குப்பம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் மீனவர்கள் போல் வேடமிட்டு கடற்கரை பகுதியில் மறைந்து இருந்தோம். அப்போது நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த பைபர் படகில் ஒரு பெரிய மூட்டையை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
கஞ்சா கடத்தல்

அதனைக் கண்டதும் மறைந்திருந்த சுங்கத்துறை அலுவலர்கள் படகுக்கு அருகே சென்றபோது அவர்கள் தண்ணீரில் குதித்து தப்பி சென்றனர். கைப்பற்றப்பட்ட பைபர் படகின் உரிமையாளரின் தகவல்கள் அடிப்படையில் தப்பி சென்ற நால்வரை தேடி வருகிறோம்," என்றார்.

சுங்கத்துறையினரின் விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட படகின் உரிமையாளர், நாகை மீனவன் என்கின்ற யூடியூப் சேனல் நடத்தி வருபவர் என்றும் இவர் சமீப காலமாக கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

"தலைமறைவாகிய நான்கு நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். நால்வரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, நால்வரும் பிடிபடும் பட்சத்தில் இவர்களுடன் தொடர்பில் உள்ள முக்கிய கடத்தல்காரர்கள் பிடிபடுவார்கள்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதை பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் முக்கிய கடத்தல்காரர்கள் சென்னை மற்றும் ஆந்திரா மாநிலத்தின் சில இடங்களில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்களை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து சுங்க அதிகாரி கழுகாசலமூர்த்தி கூறுகையில், "வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நடைபெற்று வரும் கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக நவீன ரோந்து படகுகள் மூலம் கடலில் ரோந்து பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

"சுங்கத்துறை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறை என அனைத்து பாதுகாப்புதுறை அதிகாரிகளும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்."

"வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரை ஓரம் அடர்ந்த காடுகள் இருப்பதால் அந்த பகுதி கடத்தல்காரர்கள் போதை பொருட்களை மறைத்து வைக்க சாதகமாக உள்ளது. எனவே, அந்த பகுதியில் கூடுதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட நாங்கள் முடிவு செய்துள்ளோம்."

"தொடர்ச்சியாக அந்த பகுதியில் இருந்து இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அது குறித்தும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.