வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம்


 


(க.கிஷாந்தன்)

 

சட்டங்களை கொண்டு வந்தாலும் வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்களே அதிகரம் பாதிக்கப்படுகின்றனர் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

அட்டனில் இன்று (27.09.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது. கொரோனா மற்றும் டொலர் தட்டுப்பாட்டால் மட்டும் இந்நிலைமை ஏற்படவில்லை. அமைச்சுகளில் இடம்பெறும் ஊழல்களும் இதற்கு பிரதான காரணமாகும். சீனி, எண்ணைய், வெள்ளைப்பூடு என எல்லாவற்றிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன.

 

அதேபோல வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சட்டங்களை கொண்டுவந்தாலும் அவை அமுலுக்குவருவதை காணமுடியவில்லை. வர்த்தக மாபியாக்கள் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதால் பொதுமக்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது.

 

அதேவேளை,  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ கஜேந்திரன் கைது செய்யப்பட்ட விதத்தை நாம் கண்டிக்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படுவதாக இருந்தால் அது பற்றி சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. சபாநாயகரும் பாராளுமன்றம் மற்றும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்துவது இல்லை.

 

நல்லாட்சியின்போது தமிழ் இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து மலையக இலக்கியத்தை புறக்கணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மலையகம் சார்ந்த விடயங்கள் சைவ சமய பாடநெறிக்குள்கூட உள்வாங்குவதற்கு நான் கல்வி இராஜாங்க அமைச்சராக உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன். 2019 இற்கு பின்னரான காலப்பகுதியில் இது மறைக்கப்பட்டதா என தெரியவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அறிவித்தலொன்றை விடுக்கின்றேன்." -என்றார்.