அழகிய இலங்கை தீவை முழுமையாக விழுங்கும் போதை அரக்கன்





 நூருல் ஹுதா உமர்


அழகான இலங்கை தீவில் அன்பானவர்களும் படித்தவர்களும் நிரம்பியிருக்கிறார்கள் எமது நாட்டில் மேற்கத்தைய நாடுகளுக்கு ஒப்பாக நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் சில தீய பழக்கங்கள் உயர்வலிமை பெற்றுச் செல்கின்றது என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது. மது, போதைவஸ்து மற்றும் சிகரெட் பாவனை இப்போது பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருளுக்கு அடிமையாகி வருவது கவலைக்குரிய விடயமே!


எமது நாட்டை பொறுத்தவரையில் கடந்த இரு வருடங்களாக பாரிய பல நெருக்கடிகள் இருந்து வருகிறது. கொரோனா காலத்திலும் அந்த கால சூழ்நிலையிலும் மதுவிற்காக ஏங்கி மிக நீண்ட வரிசையில் நின்ற குடிமக்களை பார்க்கும் போது  இப் பழக்கவழக்கங்கள் எமது கலாச்சாரத்துடன் வேரூன்றி விட்டது என்பதை நாம் அனைவரும் வேதனையுடன் அவதானிக்கும் ஒரு விடயமாகும். வன்முறை மிக்க குடும்ப, சமூக பிரச்சனைகளின் தூண்டியாக போதைப்பொருள் பாவனை அமைந்திருப்பது என்பது அப்பட்டமான உண்மை.  ஊட்டசத்துக்கள் எதுவுமற்ற அருவருக்கத்தக்க திரவத்தை உற்சாகம் தரும் பானமாக, களைப்பையும் உடல்வலியையும் தீர்க்கும் நிவாரணியாக  குடிமக்கள் எண்ணுகிறார்கள்.  பெரும்பாலானோர் இந்த பழக்கத்தில் இருந்து மீளமுடியாத காரணத்தினால் தமது ஆரோக்கியமான வாழ்கையையும், மகிழ்ச்சியான குடும்பங்களையும், தமது சந்ததிகளின் எதிர்காலங்களையும் தொலைத்து கடனாளியாகவும் நோயாளியாகவும் மாறி பிரமை பிடித்தவர்கள் போல அலைந்து திரிகின்றனர்.  கெட்ட நண்பர்களாலும், சலனப்பட்ட எண்ணங்களாலும், விளம்பரங்களின் மூலமாகவும், சினிமாவின் ஆதிக்கத்தினாலும் ஆரம்பிக்கும் போதைப்பொருள் பாவனையினால் இவர்களின் நாட்களை போதையில்லாமல் கடத்த திணறுகிறார்கள். கல்லூரிகளில் போதைப்பொருள் பாவிக்காவிடின் எம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற பயத்திலேயே பல மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானார்கள் என்பதை அறிந்தபோது கவலைப்படுவதா? கோபப்படுவதா ? எனும் நிலை உருவாகிறது.


இன்றைய சூழ்நிலை எப்படி மாறியிருக்கிறது என்றால் ஒருவர் போதைவஸ்து பாவிக்காமல் இருந்தால் அவரை இச் சமூகமும் ஏளனமாக பார்க்கின்றது. மது, போதை வஸ்து மற்றும் சிகரெட்டினால்  உடலின் அனேக தொகுதிகள் பாதிப்புக்குள்ளாகின்றது. ஈரல் நிரந்தர பாதிப்பிற்குள்ளாவதால் உடலின் நஞ்சகற்றல் தொழிற்பாடு,புரதத்தொகுப்பு,  குருதியுறைதலிற்கு அவசியமான பதார்தங்களின் தொகுப்பு என்பன இடம்பெறுதல் தடைப்படுகின்றது. குடற்புண்கள், இரத்தவாந்தி, இரத்த வயிற்றுப்போக்கு, சதை அழற்சி என்பன ஏற்படலாம். உடலில் நச்சுப்பதார்தங்களின் சேர்க்கையால் இவ் நச்சுப்பதார்தங்களே உடலுறுப்புக்களில் புற்றுநோயைத் தோற்றுவிக்கலாம். பலவீனமான இதயம் மற்றும் குருதிச் சுற்றோட்டத் தொகுதியால்  உயர் குருதியழுத்தத்திற்கு உட்படுதல். மூளை மற்றும் சுற்றியல் நரம்புகளில்  நிரந்தர பாதிப்புக்கள். பலவீனமான நீர்ப்பீடனத் தொகுதியும் உடற்சுகாதாரம் குறைந்த நிலையும் பலவிதமான தொற்று நோய்களிற்கு உட்படுத்தும் என துறைசார் வல்லுநர்களும், வைத்தியர்களும் தவறாமல் வலியுறுத்தி வருகிறார்கள்.  இளைஞர்கள் இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறியாது இதனை ஒரு கலாச்சாரமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது சமீபத்தைய நாட்களில் நடக்கும் அனாச்சார விடயங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். இதனால்  மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியிருத்தல், உளச்சோர்வுக்குள்ளாகல், நித்திரையின்மை, வலிப்பு ஏற்படுதல் போன்ற உளரீதியான பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் குடும்பத்தில்  துஷ்பிரயோகங்கள், குடும்பத்தில் நிம்மதியின்மை, வன்முறைகள், கடன் தொல்லை, தற்கொலை, கொலை முயற்சி, விபத்துக்கள் என்பன இடம்பெறுகின்றன.


இப் பழக்கவழக்கங்களால் உடலுக்கு சக்தியும்  உற்சாகமும்  கிடைக்கின்றது என நினைக்கிறார்கள். இது முட்டாள்தனமான நினைப்பாகும். நிச்சயமாக உடலுக்கு சக்தியும்  உற்சாகமும் கிடைப்பதில்லை. குடிப்பழக்கத்தால் நோயாளி ஆகின்றோம். குடியில் ஏற்படுவது தூக்கமல்ல, மூளையில் ஏற்படும்  சமநிலை குறைவு தன்மை. பெரும்பாலானோர் உடலுக்கு நல்லது என கூறி அதனை அருந்துகின்றனர். மது பாவனை  ஈரலில் நிரந்தர பாதிப்பினை உருவாக்கும். குடிப்பவர் குடிக்காத போது கை கால் நடுங்குமாயின் இது  ஒரு பாரதூரமான நிலைமையாகும். அப்படியானவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். ஆண்கள் தான் காலாகாலமாக குடித்து சீரழிகின்றார்கள் என்றால் இன்றைய கால ஓட்டத்தில்  பெண்களும்  போதைக்கு அடிமையாக  இருக்கிறார்கள்.


இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று 2019 ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்த நிலை பலமடங்கு உயர்ந்திருக்கிறது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டு இது குறித்த ஆய்வு அறிக்கை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகஸ்தர்கள், ஆரம்பத்தில் இலவசமாக போதைப்பொருட்களை வழங்கி, அவர்களை அடிமைப்படுத்தி விடுவதாக கலால் திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இலவசமாக போதைப்பொருளைப் பெறுகின்ற சிறுவர்களுக்கு, ஒரு கட்டத்தில் இலவச விநியோகம் நிறுத்தப்படுவதாகவும், அதனையடுத்து அவர்கள் பணம் கொடுத்து போதைப்பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் இந்த கட்டுரைக்கான ஆய்வில் அறிய முடிந்தது. எனவே, போதைப்பொருளை வாங்குவதற்கான பணத்துக்காக, சிறுவர்கள் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி மட்டுமல்ல. நாளைய இலங்கையின் தலைவிதி திசைமாறுவதையும் காட்டுகிறது. இதில் ஒரு வேதனையான விடய என்னவென்றால் சுற்றுலா பிரதேசங்கள் மற்றும் அவற்றின் அண்மையில் இருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையும், சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடியாமையாதலும் அதிகமாகக் காணப்படுகின்றது என்பது கசப்பான உண்மை. இதனை பல அதிகாரிகளே கடந்த காலங்களில் ஒப்புக்கொண்டுள்ளனர்.


இலங்கையில் யுத்தம் நிலவிய காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால், போதைப்பொருள் செயற்பாடுகள் பரவியதாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு இலங்கை முக்கிய தளமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது இந்த நிலவரத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு கலால் திணைக்கள பரிசோதகர் பி. செல்வகுமார் 11 ஜூலை 2019 அன்று தெரிவித்த கருத்தை அடிக்கோடிட்டு பார்க்கவேண்டியுள்ளது. போதைப்பொருட்களுக்கு எதிரான திட்டத்துக்கு இணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனால்தான் அண்மைக் காலங்களில் அதிக அளவு போதைப் பொருள்களை கைப்பற்ற முடிந்ததாகவும் அவர் அந்த பேட்டியில் சுட்டிக்காட்டினார். மேலும் சிறுவர்கள் இவ்வாறு போதைப் பொருளுக்கு அடிமையாவதன் மூலம் அவர்கள் மலட்டுத் தன்மையை அடைவதாகவும் செல்வகுமார் கவலை தெரிவித்தார்.


ஆய்வில் 18 வயதிற்குக் குறைந்த சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் மேலும், நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் வரையானோர் போதையை தேடி அலைவதாகவும்,  இத்தகையோரில் 1,500 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன. சமூக மற்றும் சமய ஒழுங்குகளையும் பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, இப்போது போதைப்பொருட்கள் மலிவில் விற்கப்படுகிறது. இந்த விடயத்தின் பாதகத்தன்மை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இறுக்கமான முடிவுகளை ஏற்படுத்த வேண்டும்.  துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் முலம் விழிப்புணர்வை ஏற்படுத்தல். மது பாவனையை குறைக்க முற்படும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மது வரித் திணைக்களம், சுங்கவரித் திணைக்களங்கள் போன்றவை காணப்படுகின்றன. இன்றைய  குடியுடன்  குடும்ப வன்முறைகள் மற்றும் கலாச்சார சீரழிவுகளிலிருந்தும் எமது சமுகத்தை பாதுகாப்பதற்கு போதை வஸ்துக்களை குறைப்பதற்கான வழி வகைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கு வழிகளாக  போதைப்பொருள்பாவனை செய்வதில்லை என சபதம் எடுத்தல்.  நல்ல பல பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கைகளை வளர்த்துக் கொள்ளல், பாவனையால் வரும் வீண் விரயத்தை உணர்ந்து அதற்குரிய செலவை சேமிப்பாக மாற்றுதல் என்பனவாகும்.


எமது இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை பாழாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை நாம் துரோகிகளா பார்க்கின்றோமா அல்லது அவர்களின் பகட்டுக்களில் மயங்கி அவர்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு அதிகாரம் கொடுத்து அழகு பார்க்கின்றோமா என்பதை நமது மனசாட்சிகளிடம் தான் கேட்க வேண்டும். நாளைய இலங்கையின் நம்பிக்கையான விதைகளான மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட எவருக்கும் இடமளிக்ககூடாது. போதைவஸ்து தொடர்பில் நடைமுறையில் இருக்கும் சட்டத்தை கடுமையாக்குவதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும்  சகல இடங்களிலும் இன்று போதைப் பொருட்கள் லாபகரமாக கிடைக்கக் கூடிய நிலையையே காண முடிகிறது. நாம் அதனை கண்டும் காணாதவர்கள் போல் இருப்பதன் பின்விளைவு எமது சந்ததியினரின் எதிர்காலம் சீர்குலைந்து விடும்.


இலங்கைக்குள் பலவழிகளிலும் போதைப்பொருள்  கடத்தப்படுகிறது.அதில் நவீன தொழில்நுட்பங்களை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் மற்றும் ஈசி கேஷ் எனும் செல்பேசி மூலமான பணப்பரிமாற்ற வசதி போன்றவற்றினைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் மிகவும் எளிதாக நடத்தப்படுகின்றன. உதாரணமாக, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருளைக் கடத்துகின்றவர்கள், தமது போதைப் பொருள் அடங்கிய பொதியில் ஜி.பி.எஸ். கருவியை வைத்து கடலின் ஓரிடத்தில் போட்டு விட்டு, அது பற்றி இலங்கையில் அதனைப் பெற்றுக் கொள்ளும் தரப்பினருக்கு அறிவிக்கின்றனர். கிராமங்களிலும் கொடி கட்டி பறக்கும் போதைபொருள் விற்பனை இதனையடுத்து, இலங்கைத் தரப்பினர் செல்பேசி மூலம், இந்தியாவிலுள்ள தரப்புக்கு பணத்தை அனுப்புகிறார்கள்.


அதன்பின்னர், இந்தியாவிலுள்ளவர்கள் கடலில் போட்டுள்ள பொதியின் ஜி.பி.எஸ். கருவியை அடையாளம் காண்பதற்கான குறியீட்டு இலக்கத்தை இலங்கை தரப்புக்கு வழங்குகின்றனர். அந்த ஜி.பி.எஸ். கருவி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அதனுடன் இருக்கும் போதைப்பொருளை இலங்கைத் தரப்பு கைப்பற்றிக் கொள்கிறது. இவ்வாறான கடத்தல்களை முறியறிப்பது பெரிய சவாலாகும். போதைப் பொருட்களை கொடுப்பவரும், பெற்றுக் கொள்கின்றவரும் சந்திக்காமலேயே, கடத்தல் வியாபாரம் முடிந்து விடுகிறது. என்கிறார் மது வரி திணைக்கள தலைமை கண்காணிப்பாளர் ஒருவர். இதற்கு தேசப்பற்று மிக்க இலங்கையர்களாகிய நாம் இடமளிக்க கூடாது. இப்படியான விடயங்களை அவதானித்தால் அவர்களை கட்டிக்கொடுப்பதில் பின்னிற்கவும் கூடாது. தவறினால் எமது தேசத்தினதும், சமுதாயத்தினதும் எதிர்காலம் பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவே அமைந்து விடும். எனவே சிந்தித்து செயற்பட்டு இளம் சந்ததியை பாதுகாக்க வேண்டும்.


நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணியாக இருப்பது போதைப் பொருட்கள். இவற்றை ஒழிப்பதன் மூலம் வன்முறை சம்பவங்களை குறைக்க முடியும் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு சமூகம் குற்றங்கள் அற்ற சமூகமாக இருக்க வேண்டுமானால் அங்கு போதைப் பொருட்கள் இல்லாது இருக்க வேண்டும். இன்றைய சமூகத்தில் வாழ்கின்றவர்களில் போதைக்கு அடிமையாகாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்றால் வியப்பதற்கில்லை. இது பாவிப்பவரினை அடிமைப்படுத்தி அந்த சமூகத்தையே சீரழித்து விடும்.போதைப்பாவனையானது ஒருவரை அதற்கு அடிமையாக்கிவிடும். அவரது வருமானம் முழுவதையும் இதற்கெனவே செலவிட்டு அவர்களது உடலையும் கெடுத்து கொள்வார்கள். இந்த போதைப்பொருள் பாவனையினால் இலங்கையில் தினமும் பல்வேறு சம்பவங்கள் பொலிஸ் நிலையங்களிலும் அது தொடர்பிலான அலுவலகங்களிலும் பதிவு செய்யப்பட்டே வருகிறது.


போதைப்பொருள் பாவனை சமூகத்திற்கு மட்டுமல்ல தனிநபருக்கு சுகாதார ரீதியாக பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்துகிறது.  உடல்பருமன், ஈரல், குடல், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு விரைவில் நோயாளியாகி இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் தான் “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு” என பல விளம்பரங்களை ஆங்காங்கே பல இடங்களில் காணமுடியும். இவற்றை பார்த்தும் யாரும் திருந்துவதாக இல்லை. திரைப்படங்களில் ஆரம்பத்தில் இந்த வாசகத்தை காட்சிப்படுத்தி விட்டு பின்னர் குடியும் கும்மாளமுமாக சினிமா நட்சத்திரங்கள் போதைக்கு மார்க்கட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் வேறுகதை. அதிக சிறுவர்களை போதைப்பொருள் பாவனையின் பக்கம் இழுத்துச் சென்ற பெருமை தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களையே சாரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


துரதிஷ்டவசமாக நாட்டின் பல இடங்களில் இன்றைக்கு மதுபான சாலைகள் பெருகிவிட்டன. மதுபானம் இன்றைக்கு பெரும் வியாபாரமாக மாறிவிட்டது. இதனால் பல குடும்பங்கள் வறுமையாலும் பல குடும்பங்களில் பிரச்சனைகள் தோன்றவும் நாட்டில் களவு, கொலை, விபத்துக்கள் இடம்பெறவும் மதுப்பாவனை ஒரு பிரதான காரணமாகும். அது மாத்திரமின்றி பல இளைஞர்கள் கல்வி கற்க வேண்டிய சிறுவர்கள் கூட தமது கல்வியை இடைநிறுத்தி விட்டு மதுப்பாவனைக்கு அடிமையாகி சுற்றிக்கொண்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். சிறுவயதில் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுவதனால் இவர்களின் கல்வி எதிர்காலம் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் போய் அவர்களை நம்பியுள்ள குடும்பங்களும் வேதனை அடைய செய்வதாக போதைப்பாவனைகள் அமைகிறது. இவ்வாறான போதைக்கு அடிமையானவர்கள் “கொலை, களவு, கொள்ளை, பெண்கள் மீதான வன்முறை” போன்றவற்றை செய்யும் அரசியல் அடிமைகளாக இன்றைக்கு சமூகத்தில் காணப்படுகின்றனர். பாரியளவிலான மதுபான சாலைகள் எமது நாட்டின் அரசியல் முக்கிய புள்ளிகளின் பெயரில் அல்லது அவர்களின் பினாமிகளின் பேரில் இயங்குகிறது. அண்மைய மக்கள் எழுச்சியில் முன்னாள் அமைச்சரின் வாகனம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட மதுபான போத்தல்களும், மதுபான சாலைகளில் நடைபெற்ற தாக்குதல்களின் போது கண்ட காட்சிகளும் எமது இலங்கை தீவின் நாளைய எதிர்காலத்தின் அச்சநிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது.


நாட்டினுடைய வருங்காலத்தை தீர்மானிக்க வேண்டிய இளம் சமுதாயத்தினர் கல்வி கற்று நல்ல சமுதாய பிரஜைகளாக மாறவேண்டும் என்பதுவே ஒவ்வொரு பெற்றோர்களினுடைய கனவாகும். அதற்காக அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பல தியாகங்களை செய்து தமது பிள்ளைகளை வளர்த்து கல்வி கற்க அனுப்புவார்கள். ஆனால் இன்றைய காலத்து இளைஞர்கள் சிறுவயதிலேயே சில சமூகவிரோதிகளான மதுப்பாவனையில் ஈடுபடும் நண்பர்களோடு சேர்ந்து போதைப்பழக்கத்துக்கு சிறிது சிறிதாக ஆரம்பித்து போதை இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு அவர்களை கொண்டுபோய் நிறுத்தும் பெருமைக்குரியது இப்போதைப்பாவனை. இதனால் ஏதுமறியாத சிறுவர்கள் கூட தமது எதிர்காலத்தை இழந்து நிற்கும் நிலையானது மிகவும் வேதனைக்குரியது.போதைக்கு அடிமையானவர்கள் இயல்பாகவே சமூகத்தால் வெறுக்கப்பட்டு இயல்பாக சந்தோசங்களை இழந்து இயற்கையான அழகை இழந்து அருவருக்க தக்க மனிதர்களாக போதைப்பாவனை மாற்றிவிடும்.


சாதாரணமாக வருடமொன்றிற்கு உலகளவில் 11.8 மில்லியன் மக்கள் போதைப்பாவனை காரணமான நோய்களால் இறந்து போகின்றனர். 350000 இறப்புக்கள் மதுப்பாவனையால் நிகழ்கின்றன.இவ்வாறு பல உயிரிழப்புக்களுக்கும் நோய்நிலமைகளுக்கும் பலபேருடைய குடும்பங்கள் சீரழிவாகட்டும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுதல் ஆகட்டும் இவற்றுக்கெல்லாம் காரணமான போதைப்பொருட்களை தடைசெய்யவேண்டியது மிகவும் அவசியமாகும். போதைப்பவனைக்கு எதிராக பல கோடிக்களை செலவழித்து விளம்பரம் போட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் ஏன் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குகிறது எனும் சாமானிய மக்களின் கேள்விக்கு பதிலென்ன.


பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது. போதைப்பாவனைக்கு எதிராக பல சட்ட நடைமுறைகள் காணப்பட்டாலும் இதனை மக்கள் மதிப்பதாக இல்லை. அதற்கேற்றால் போல் அரசாங்கமும் பொறுப்பான அதிகாரிகளின் இலஞ்சம் போன்ற சட்டவிரோத செயல்களால் போதைப்பாவனை அதிகமாகி கொண்டே செல்கிறது எனும் பகிரங்க குற்றச்சாட்டு உண்மைகள் நிறைந்த கசப்பான ஒன்றாகும்.  இதனால் தான் அரசாங்கங்களுக்கு அதிக வருமானமானது கிடைக்கிறது. உடனடியாக போதைப்பாவனையை தடுத்து நிறுத்தாது விடின் இதனால் பாரிய பின்விளைவுகளை எமது எதிர்கால சமூகம் எதிர்கொள்ளும். போதைப்பாவனைகளால் எமது நாடு கடுமையாக சீரழிவது மறுக்கமுடியாத உண்மை.  இதற்கு அடிமையானவர்கள் தமது வாழ்க்கையை இழப்பதுடன் தம்மை சார்ந்து இருப்பவர்களின் வாழ்வையும் படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். ஆகவே எம்மையும் எமது உறவினர்களையும் நமது வருங்கால சமூகத்தையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.


போதைவியாபாரம் செய்யும் பெரிய சுறாக்கள் சுதந்திரமாக உலாவ சிறிய நெத்தலிக்களே கைது செய்யப்படுகிறது. இந்த சட்டநடைமுறைகளை இறுக்கமாக்கி தவறு செய்யும் அதிகாரிகள் முதல் போதைபொருட்களை விற்பனை செய்யும் சுறாக்கள், திமிலங்கள் கைது செய்து சிறையில் அடைப்பதனால் மட்டுமே இக்குற்ற செயல்கள் குறைய வாய்ப்பிருக்கின்றது. பூசி முழுகி பிரச்சினைகளை தீர்க்க முடியாது. போதைப்பொருள் தொடர்பில் கைதாவோருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகாமல் விட்டால் அவர்களுக்கு இந்த பிரச்சினையின் ஆழம் தெரிந்து பலரும் திருந்த வாய்ப்பிருப்பதாக மக்கள் நம்புகின்றனர். மதஸ்தலங்கள் முன்வந்து போதைவஸ்து பாவிப்பவர்கள், விற்பவர்களை ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பதாக முடிவெடுத்தால் என்னாகும் என்பது எம் எல்லோருக்கும் தெரியும்.