மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!




 


பாறுக் ஷிஹான்


கல் ஓயா பெருந்தோட்ட அதிகாரிகளால் விவசாயிகள் மற்றும் நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என   நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினரும் (PARL), மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குநருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பகுதியில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்று  விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் 

அம்பாறை மாவட்டத்தில் பல விவசாயிகளது நிலப் போராட்டங்களில்  என்னை இணைத்துக்கொண்டு  நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் மனித எழுச்சி அமைப்பின்   இயக்குநராகவும் செயற்பட்டு நான்   சிலருடன் இணைந்து ஆய்வுக்காக சென்ற நிலையில்  கடந்த  ஏப்ரல் 5 ஆம் திகதி கல் ஓயா பெருந்தோட்டக் கம்பனியின் அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு  தகாத வார்த்தைகளால் பேசப்பட்டு மற்றும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளேன்.மொரவில் ஆறு பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன்  எமது  குழுவினர் களப்பயணத்தில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை   வன்மையாகக் கண்டிப்பதுடன்  மேலும் நில உரிமைகளுக்காகப் போராடும் ஆர்வலர்களுக்கு எதிரான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  நாம் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் தாக்குதலுக்கு உள்ளான தானும் தனது குழுவினரும் இரு நாட்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தோம்.


அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட விவசாயிகளது பாரம்பரிய நில உரிமை இழப்பு மற்றும்கரும்புப் பயிர்ச்செய்கை தொடர்பாக அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தலையீடு செய்து வருவதுடன் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில பலமுறை தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் 2023 ஏப்ரல் 5 ஆம் திகதி விவசாயிகள் இழந்த நிலம் தொடர்பான தகவல்களை சேகரிக்க நிஹால் அகமட் அம்பாறை மாவட்டத்தின் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் தலைவர் பீ கயிருதீன் ஆலோசகர் எம் எம் எம் இப்திகார் மற்றும் விவசாயிகள் சிலரை உள்ளடக்கிய குழு குறித்த பிரதேசத்தில் களப்பயணத்தை மேற்கொண்டு சில பிரதேசங்களிலுள்ள விவசாய காணிகள் தொடர்பான முறைப்பாடுகளின்படி இழந்த நிலப் பிரதேசங்களை அடையாளம் காண சென்றிருந்த நிலையில் இவ்வாறு தாக்குதலுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதே வேளை கல் ஓயா பெருந்தோட்ட அதிகாரிகளால் விவசாயிகள் மற்றும் நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

2023 ஏப்ரல் 5 ஆம் திகதி சம்மாந்துறையில் உள்ள மொறவில் ஆறு பகுதியில் மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குனர் திரு. நிஹால் அஹமட், அவரது குழு உறுப்பினர்கள் மற்றும் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கல் ஓயா பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அதிகாரிகளாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட ஆட்கள் உட்பட சுமார் இருபத்தைந்து நபர்களால் பல மணிநேரம் தாக்கப்படனர். இவ் சம்பவத்தினை காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி (PARL) வன்மையாகக் கண்டிக்கிறது. திரு. நிஹால் அஹமட் PARL இன் முதன்மை உறுப்பினராகவும், அம்பாறை மாவட்டத்தின் காணி உரிமைக்கான கூட்டணியின் இணைப்பாளராகவும், இலங்கையின் ஏழைகளது நில உரிமைகள் உட்பட்ட மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளராகவும் பல வருடங்கள் செயல்பட்டு வருகின்றார்

PARL க்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 1950 ஆம் ஆண்டில், அம்பாறை மாவட்டத்தில் நெல் விவசாயிகள் பாரம்பரியமாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட சுமார் 7250 ஏக்கர் நிலம் அப்போதைய அரசாங்கத்தால் கரும்புச் செய்கைக்காக ஒதுக்கப்பட்டது. அரச சீனி கூட்டுத்தாபனத்தின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியின் பாரம்பரிய நெல் விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்டனர் கரும்பு பயிர்ச்செய்கைக்காக மட்டுமே ஈடுபட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையின் கீழ் சிலருக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. அபகரிக்கப்பட்ட மற்றும் விவசாயம் செய்வதற்கு நிலம் கிடைக்காத மற்றவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை அல்லது அவர்களின் வாழ்வாதார இழப்புக்கு எந்த நிவாரணமும் அல்லது தீர்வும் வழங்கப்படவில்லை. அரசு எடுத்த மற்றொரு நடவடிக்கை, பாரம்பரிய நெல் விவசாயிகள் வெளியேற்றப்பட்ட நிலத்தில் மற்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை நிறுவியது இந்த விவசாய சமூகங்களுக்கு இடையே பதற்ற நிலைமையை ஏற்படுத்தியது.  Hinguran அரச சீனி கூட்டுத்தாபனம் செயல்படுவதை நிறுத்தியது மற்றும் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காக இந்த பகுதிகளில் நெல் பயிரிட்டனர் மற்றும் நெல் சாகுபடி அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருந்தது 2007 ஆம் ஆண்டு முதல், அரசாங்க தனியார் பங்காளியான கல் ஓயா பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் நிலங்கள் நிர்வகிக்கப்பட்டன. இதில் அரசாங்கம் 51% பங்குகளைக் கொண்டுள்ளது நில பயன்பாடு முழுவதும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரும்பு இப்பகுதியில் பயிரிடுவதற்கு பொருத்தமற்ற பயிராக இருந்ததாகவும், பயிரிடலில் ஏற்பட்ட தோல்வியால் பல விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் நிர்க்கதியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேற்குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி சம்மாந்துறை பொலிஸ் நிலையம் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.