எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினை





 மாளிகைக்காடு நிருபர்


உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை நிர்ணயம் தொடர்பாக தேசிய எல்லை நிர்ணயக்குழு வெளியிட்ட நகலில் பாலமுனை பிரதேசத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான விடயத்தினை சீரமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் அட்டாளைச்சேனை பிரதேச செயலத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எ.ஏ.சி.அகமட் சாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எப்.நஜிஹா முஸாபிர், பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல்.ஜவ்பர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.எம்.பாரீன், பாலமுனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.எல்.அலியார், ஊடகவியலாளர் ஐ.ஏ.சிறாஜ் உட்பட பாலமுனை அனைத்து ஜும்ஆப்பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்கள், அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை நிர்ணயம் தொடர்பாக தேசிய எல்லை நிர்ணயக்குழு வெளியிட்ட புதிய நகலில் அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்துடன் பாலமுனை 2ஆம் பிரிவு கிராம சேவகர் பிரிவை இணைத்துள்ளமை தொடர்பான விடயத்துக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரியே பிரதேச செயலாளரிடம் இம்மகஜர் கையளிக்கப்பட்டன. மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் ஆணையாளர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கான மகஜரின் பிரதிகளும்  பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.