தொற்றா நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை




 


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தொற்றா நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை


நூருள் ஹுதா உமர்


இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை பாதுகாக்கும் முயற்சியின் ஒர் அங்கமாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற தொற்றா நோய் நிலையினை அடையாளம் காண்பதற்கான மருத்துவப் பரிசோதனை நிகழ்வினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிகழ்வானது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையுடன் இணைந்து, இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் (26) இன்று பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.


இந்த மருத்தவப் பரிசோதனை நிகழ்ச்சித்திட்டமானது பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற தொற்றா நோய்களை அடையாளம் கண்டு, நிவர்த்தி செய்வதனை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.


 விஷேடமாக, இருதய நோய்கள், நீரிழிவு, உயர் குருதி அமுக்கம் மற்றும் புற்றுநோய் ஆகிய நோய் நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதனை இலக்காக் கொண்டது.


 இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முதற் தொகுதியில் 50 இற்கும் அதிகமான ஊழியர்கள் முழுமையான மருத்துவப் பரிசோதனையில் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வானது இவ்விரண்டு நிறுவனங்களுக்கும் இடையில் 17.05.2023 மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் விளைவாகும்.


இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சறூக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், தொற்றா நோய்களை அடையாளம் காண்பதற்கான இந்நிகழ்வானது பல்கலைக்கழக ஊழியர்களின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதற்கும் இவ்வாறான நோய்நிலைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கும் பல்கலைக்கழக நிருவாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஓர் முக்கியமான முயற்சி எனக் குறிப்பிட்டார். 


இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. ரமீஸ் அவர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வினையும் உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் தமது பாரட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.