வீதியால் சென்றவர் மீது வெட்டு


 


பாறுக் ஷிஹான்


வீதியால் சென்றவர் மீது வெட்டு-சந்தேக நபர் ஒருவர் காயம் மற்றுமொருவர்  தலைமறைவு -பொலிஸ் விசாரணை முன்னெடுப்பு 

மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது  செய்ய  கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று காலை  மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர்   மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன் போது இச்சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க  இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற மேசன் வேலை செய்யும்   குடும்பஸ்தரே  காயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பதில்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்   குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான  பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பின்னணி

இரண்டாவது திருமணத்தில் இணைந்த ஒருவர் அவரது மனைவிக்கு தினம் தோறும் தொந்தரவு செய்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து இத்தொந்தரவு செயற்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்  தனது சகோதர்களிடம் முறையிட்டிருந்தார்.இந்நிலையில் சகோதரிக்கு தொந்தரவு செய்து வந்த மச்சானை இரு சகோதரர்களும் வீதியில் இடைமறித்து  தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் மனைவி தரப்பிலும் கல்முனை தலைமையக பொலிஸ்  நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டு தலைமைறைவான மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய கல்முனை தலைமையக  பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.