ஒடிஷாவில் 3 ரயில்கள் மோதியதில் 233 பேர் பலி - 1,000 பேர் காயம்




 


ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 233 பேர் உயிரிழந்தனர். சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியன விபத்தில் சிக்கி பயணிகள் ரயில்கள் ஆகும். விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதனால், அந்த மார்க்கத்தில் செல்லும் சென்னை - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


ஒடிஷாமாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, இந்த ரயில் விபத்தில் 233 பேர் உயிரிழந்ததை தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக உறுதி செய்துள்ளார்.


விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்றுள்ளார். அத்துடன், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ரயில்

பட மூலாதாரம்,ANI

விபத்து நேரிட்டது எப்படி?

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்திருந்தனர்.


அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால்தான் இந்த கொடூரம் நேரிட்டது.



இதுகுறித்துப் பேசிய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, “சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10-12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன.


அப்போது தடம் புரண்ட அதன் ரயில் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன,” என்று தெரிவித்துள்ளார்.


ஒடிசாவின் தலைமைச் செயலாளார் பிரதீப் ஜெனா, “இரண்டு ரயிலிலும் சில பெட்டிகள் தடம் புரண்ட பிறகு அருகிலிருந்த சரக்கு ரயில் மீதும் மோதியது,” என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசியவர், “பாலசோர் மருத்துவக் கல்லூரி, எஸ்சிபி மருத்துவக் கல்லூரி, பாலசோர் மாவட்ட மருத்துவமனை, பத்ரக் மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன,” என்று கூறினார்.


ஒடிசாவில் ரயில் விபத்து

பட மூலாதாரம்,SUBRAT PATI

உயிர் தப்பியவர்கள் கூறியவை என்ன?

விபத்தில் தப்பிய ஒருவர், "விபத்து நடந்தபோது 10 முதல் 15 பேர் என் மீது விழுந்தனர். பெருங்குழப்பமாக இருந்தது. நான் மனிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்தேன்” என்றார்.


"எனக்கு கையிலும் கழுத்தின் பின்புறத்திலும் காயம் ஏற்பட்டது. நான் ரயில் போகியில் இருந்து வெளியே வந்தபோது, யாரோ ஒருவர் கையை இழந்திருப்பதையும், ஒருவரின் காலை இழந்ததையும், ஒருவரின் முகம் சிதைந்திருப்பதையும் பார்த்தேன்," என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.


ரயில்

பட மூலாதாரம்,ANI

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தேன். விபத்து நடந்தபோது தூங்கிக் கொண்டிருந்தேன். விபத்து நடந்த போது பலத்த சத்தம் கேட்டது. ரயில் கீழே சென்று கொண்டிருந்ததால் எழுந்தேன். மேலே இருந்த படுக்கையில் இருந்தபடி மின்விசிறியை பிடித்துக்கொண்டேன்.ரயில் நின்றதும் கீழே இறங்கினோம்.எல்லோரும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.என்னை காப்பாற்றுங்கள்,எனக்கு உதவுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் யாருக்கு உதவுவது?ஆனால் அதற்குள் ரயிலின் கேண்டீன் தீப்பிடித்தது. அதனால் நாங்கள் ஓடிவிட்டோம்.” என்றார்.


நேரில் பார்த்தவர் மற்றொருவர், "யாருக்கும் கை இல்லை. யாருக்கும் கால் இல்லை. எல்லோரும் இப்படியே கிடக்கிறார்கள். விபத்து நடந்தபோது யாரும் இல்லை. பயணிகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். எல்லோரும் பயந்தார்கள். அப்போது யாரை காப்பாற்றுவது என புத்தி கூட வேலை செய்யவில்லை.”


“எங்கள் இருக்கைக்கு அடியில் இரண்டு வயது குழந்தை உயிருடன் இருந்தது. உயிர் பிழைத்துக் கொண்டது.” என்று மற்றொருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


ரயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூட்டம்

விபத்து நடந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பேருந்துகள் நிறுத்தப்பட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


பாலசோர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை மையத்திற்கு வெளியே மக்கள் கூடியுள்ளனர்.


நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், ஆனால் செய்தி எழுதும் வரை, தடம் புரண்ட போகிகளில் மக்கள் சிக்கியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.


ரயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேரில் செல்லும் ரயில்வே துறை அமைச்சர்

விபத்து நடந்த பகுதிக்குச் செல்வதாகத் தெரிவித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும்,” என அறிவித்துள்ளார்.


இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், “நாங்கள் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். நாளை காலையில் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்வேன்.


காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதும் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவுவதும்தான் இப்போதைய முன்னுரிமை,” என்று கூறியுள்ளார்.


உதவிக்கு வந்த மேற்கு வங்க முதல்வர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே துறையுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தனது மாநிலத்தில் இருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


விபத்து நடந்த இடத்திற்கு மாநில அரசு நிவாரணம் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.




ஏற்பு மற்றும் தொடரவும்

காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இதுவரை கிடைத்த தகவலின்படி, குறைந்தபட்சம் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக புவனேஸ்வரை சேர்ந்த பிபிசியின் செய்தியாளர் சுப்ரதா பதி தெரிவித்துள்ளார்.


ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் கியான் ரஞ்சன் தாஸ், “அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக” கூறினார்.


பிடிஐ, ஏஎன்ஐ செய்தி முகமைகள் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்திருப்பதைக் காணக்கூடிய வகையிலான சில படங்களை வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்

பட மூலாதாரம்,ANI

பிரதமர் இரங்கல்

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.


காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், “இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன, என்று தெரிவித்துள்ளார்.


கருணாநிதி பிறந்தாள் விழா ரத்து

ஒடிஷா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சிக்கு முதல் அமைச்சர் செல்லும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


ரயில்வே துறையின் தற்காலிக உதவி எண்

மக்களுக்கு உதவுவதற்காக 044- 2535 4771 என்ற தற்காலிக உதவி எண் உருவாக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


மேலும், சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களையும் 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவித்துள்ளது.


Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.


ஏற்பு மற்றும் தொடரவும்

காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ஹௌரா, காரக்பூர், பாலசோர், ஷாலிமார் ரயில் நிலையங்களில் உதவி எண்கள் இயக்கப்பட்டுள்ளதாக காரக்பூர் மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு ஆலோசித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.


மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒடிசா மாநில முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.


விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சரையும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.


ஒடிசா ரயில் விபத்து


திருப்பிவிடப்பட்டுள்ள பிற ரயில்கள்

இந்த விபத்து காரணமாகப் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.


ஹவுரா-புரி விரைவு ரயில், ஹவுரா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா சென்னை மெயில், ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கொல்கத்தா சென்னை கோரமண்டல் ரயில் விபத்து அவசர கால உதவி எண்கள்: 06782-262286 ( ஒடிசா அரசு உதவி எண் ) ரயில்வே உதவி எண்கள்: 033-26382217 (ஹவுரா), 8972073925 (காரக்பூர்), 8249591559 (பாலசோர்) மற்றும் 044- 25330952 (சென்னை)