கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்




 


பாறுக் ஷிஹான்


நீர்கொழும்பை பிரதான தளமாக கொண்டு செயற்படுகின்ற அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கம் முதன்முதலாக கடந்த வாரம் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டது.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை (09) இத்தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்தார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவ அமைப்புகளையும் அரவணைத்து செயற்படுகிற திட்டத்தின் ஒரு அம்சமாகவே இவ்விஜயம் அமைந்தது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த வருடம் ஜூன் மாதம் கொழும்புக் கடற்கரையில் தீக்கிரையானது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் மீனவர்களுக்கு மிக பாரதூரமான தொடர் பாதிப்புகள் நேர்ந்துள்ளன..
இந்நிலையில் அரசாங்கத்தால் நஷ்ட ஈடாக பெறப்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பீடு நாடளாவிய ரீதியில் மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று முன்வைத்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இது குறித்த அறிவூட்டல், தெளிவூட்டல், விழிப்பூட்டல் ஆகியவற்றை வழங்கி வழக்கு நடவடிக்கையிலும், இழப்பீட்டிலும் வடக்கு, கிழக்கு மீனவ அமைப்புகளையும் அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கம் சட்டப்படி உள்ளீர்க்கின்றது.  
மருதமுனை -06 மக்பூலியா மீன்பிடி சங்கத்தால் அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது
அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் பொது செயலாளர்  டினேஸ் ரஞ்சன் பேர்ணாண்டோ, தலைவர் அருண் ரொசாந்த மற்றும் தேசிய அமைப்பாளர் பிரசன்ன பெர்ணாண்டோ உள்ளிட்டோர் சிறப்புரைகள் மேற்கொண்டனர்.
அருண் ரொசாந்த அவருடைய உரையில் சுற்றுலா துறையை மேம்படுத்துதல் என்கிற போர்வையில் அரசாங்கத்தால் கடல் வளம் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகின்றது என்று குற்றம் சாட்டினார்.

மீனவர்களின் நலன் பேணும் நடவடிக்கைகள் அனைத்திலும் இணைந்து செயற்படுவது என்று அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கம், மக்பூலியா மீன்பிடி சங்கம் ஆகியன ஒருமனதாக இணக்கம் கண்டு நல்லெண்ண புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஆவணங்களை பரிமாறி கொண்டன.