ஜனநாயகத் திருவிழா




 


இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.

மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும்.

யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்?

இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.