மூத்த இலக்கியவாதியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான முத்துமீரான் அவர்கள் மறைவு




 


நிந்தவூரைச் சேர்ந்த மூத்த இலக்கியவாதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான முத்துமீரான் இன்று வயது மூப்பின் காரணமாக 83 வது வயதில் காலமானார்.

நிந்தவூர், பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலை இலக்கிய ஆளுமை எஸ். முத்துமீரான்.

இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பல்துறைப் படைப்பாளி


1957ல் தனது 16 வது வயதில் இலங்கை வானொலியில் நாடக ஆசிரியராக கலையுலகப்  பிரவேசம் பெற்றவர், 


 ஐந்து சிறுகதை நூல்கள்,ஆறு நாட்டாரியல் தொகுப்பு,ஆய்வு நூல்கள், மூன்று கவிதை நூல்கள் ,இரண்டு உருவகைக் கதை நூல்கள்,ஒரு நாடகத் தொகுப்பு என்பவை உள்ளடங்கலாக 20

 நூல்களை   இன்று வரை இலக்கிய உலகத்திற்குத் தந்திருப்பவர்,


தன்னை ஒரு கிராமத்தான்,நாட்டுப்புறத்தான் என்று சொல்லிக்  கொள்வதிலே பெருமைப்பட்டுக் கொள்ளும் முத்துமீரான் கொழும்பு பல்கலைக்கழக சட்டப் பட்டதாரியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமாவார்.


அறுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான கலை இலக்கியப் பரிச்சயமுடைய இவர்,


ஈழத்துப் படைப்பாளர்களில்  தனித்துவ  அடையாளம் பெற்றிருப்பவர்..அன்றாடம்  நாம் காணும் காட்சிகள், பழகும் மாந்தர்கள் நமது வாழ்வு என்பவற்றை தனது படைப்புகளில் கச்சிதமாகக் கொண்டு வருபவர்,


கிராமிய மண் வளம்,பேச்சுமொழி என்பவற்றை அப்பி வருபவை அவரின் படைப்புக்கள்..நமது பண்பாட்டுக் கோலங்களை அவரின் சிறுகதைகள், கவிதைகள்,நாடகங்கள்,என்பவற்றில் நாம் தரிசிக்கலாம்.  அவரின் படைப்புகள் யதார்த்தத்திற்கு  மிக நெருக்கமானவை.


ஏனைய எழுத்தாளர்களிடமிருந்து முத்துமீரானை வேறுபடுத்திக் காட்டுவது,அவருடைய நாட்டாரியல்  செயற்பாடுகள்தான்.

எஸ். முத்துமீரான்.

  .கிழக்கிலங்கை முஸ்லிம்களின்       கிராமியக் கவியமுதம்

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய் மொழிக் கதைகள்

கிழக்கிலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பூர்வீகமும் – வாழ்வும் வாழ்வாதாரங்களும் என்ற


நாட்டாரியல் ஆய்வுகள் மூலம்  தமிழ் நாட்டிலும் பிரபலம் பெற்றிருக்கிறார். அங்கு ,இவருடைய நூல்கள் பல்கலைக் கழகங்களில் உஷாத் துணை நூல்களாகப் பயன்படுகின்றன. தமிழ்நாட்டிலும் பேராசிரியர்கள், கவிஞர்களோடு நட்புறவைப் பேணி வருகின்றார்.  இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கின்றார்- மாநாட்டு  நிகழ்ச்சிகளில் தலைமை ஏற்கின்றார்.


இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் கூட  அவருடைய நாட்டாரியல் ஈடுபாட்டை நிரூபிக்கும்.


கக்கக் கனிய,என்னடா குலமும்் கோத்திரமும்,முதியன் கண்டு தயிரு,சட்டத்துர கொதறத்த என்னெண்டு செல்ற,பேத்த மீன் போன்ற சிறுகதைத் தலைப்புகள் அவரின் நாட்டாரியல் பிரக்ஞையை  தெளிவுபடுத்தும்.


 ஊடக வசதிகள் குறைந்திருந்த   அந்தக் காலத்தில்,  முத்துமீரானின் வானொலி நாடகங்கள்  கிராமியப் பேச்சுமொழிக்காகவும், தொனிக்கும் கிராமிய வாழ்வியலுக்காகவும் நேயர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததை  திறனாய்வாளர்கள் எடுத்துக் காட்டுவர்.


கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தி்ன் நிந்தவூர் மண்ணின் மைந்தனான முத்துமீரான்,கலை இலக்கியப் பணிக்காக  பரிசுகள் பட்டங்கள் என்று  நிறையவே பெற்றிருக்கின்றார்.


கலாபூஷண விருது,


கலாசார அமைச்சின் இலக்கிய வேந்தன் விருது


கொடகே சாஹித்ய  வாழ்நாள் சாதனையாளர் விருது 


வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் நூல்களுக்கான சாஹித்ய விருது


என்பன அவற்றுள் சில. 


மண்வளச் சொற்கள், கிராமியம் குறித்துப் பேசுபவர்கள் முத்து மீரானைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாதவாறு  இலக்கிய உலகில் சாதனைகளைப் புரிந்திருப்பவர்,.


மண்ணும் மக்களும் கொண்டாடத் தக்க மூத்த கலைஞர் முத்துமீரான் மறைவை ஒட்டி www.ceylon24.com .