அரசியல் களத்தில் காத்திருக்கும் தரமான சம்பவம்....!




R.Sanath

படத்துக்கும் - பதிவுக்கும் சம்பந்தம் உண்டு.....
இலங்கையில் நாளை மறுதினம் 6 ஆம் திகதி 339 உள்ளுராட்சி சபைகளுக்குரிய தேர்தல் நடைபெறவுள்ளது. நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்தி முடிப்பதற்குரிய அத்தனை ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
339 சபைகளுக்கு தேர்தல் நடந்தாலும் கொழும்பு மாநகரசபையை கைப்பற்றுவதில் பிரதானக் கட்சிகள், பிரச்சார போரின்போது தீவிரம் காட்டின.
இலங்கை அரசியலில் மஹிந்த ராஜபக்ச கோலோச்சி இருந்த காலப்பகுதியில்கூட அவரால் கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்ற முடியாமல்போனது. அங்கு ஐக்கிய தேசியக் கட்சியே ஆதிக்கம் செலுத்தி, ஆட்சியை தக்கவைத்து வந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில்கூட ஐதேகவின் ஆதரவைப் பெற்ற சுயேச்சைக்குழுவொன்றே ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது.
ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின்போது கிடைக்கப்பெற்ற வெற்றியை குட்டி தேர்தலிலும் தக்க வைத்துக்கொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தி உறுதியாக நம்புகின்றது. அதேபோல கொழும்பு மாநகர சபையிலும் தேசிய மக்கள் சக்தி கொடி பறக்க வேண்டும் என அக்கட்சி விரும்புகின்றது.
அதேபோல தனது அரசியல் கோட்டையாகக் கருதப்பட்ட கொழும்பு மாநகரசபையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் - கூட்டணி அமைத்து களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சி கைகூடவில்லை.
ஐதேக விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு தயாராக இருந்தாலும் - சஜித் தரப்பில் இருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளிக்காட்டப்படவில்லை . ஐதேக - ஐமச சங்கமம் சாத்தியப்படாததாலேயே மேயர் வேட்பாளராக களமிறங்கும் முடிவில் இருந்து எரான் விக்கிரமரத்ன பின்வாங்கினார் எனவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை முதன்முறையாக உள்ளுராட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது. குறிப்பாக கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றிவிடலாம் என அக்கட்சி உறுதியாக நம்புகின்றது.
கொழும்பு மாநகரசபைக்கு பல அரசியல் கட்சிகளும், சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுவதால் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை பிரதான இரு கட்சிகளில் ஒன்றால் பெறமுடியுமா என்றே கேள்வியும் எழுகின்றது.
சரி கொழும்பு மாநகரசபை பற்றியே இப்பதிவில் எழுதப்படுகின்றது. எதற்காக இந்த பெண்ணின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என உங்கள் ஆழ் மனம் கேள்வி எழக்கூடும். இனி விடயத்துக்கு வருவோம்.
ஆஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ஆணையை பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் கட்சி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்கு - கூட்டணிக்கு பொதுத்தேர்தல் முடிவு மரண அடியாகவே அமைந்தது. அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், தனது அரசியல் கோட்டையிலேயே தோல்வியடைந்துள்ளார்.
இப்படத்தில் காணப்படும் ஒற்றைக் காலுடைய பெண் அரசியல்வாதியின் பெயர்தான் அலி பிரான்ஸ். இவர் லேபர் கட்சியின் சார்பில் பிரிஸ்பேன் - டிக்சன் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆஸ்திரேலிய அரசியல் களத்தில் மிக முக்கிய புள்ளியாகக் கருதப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனை, அவரது அரசியல் கோட்டையிலேயே இவர் மண்டியிடவைத்தார்.
பிரிஸ்பேனில் டிக்சன் தொகுதியென்பது பீட்டர் டட்டனில் அரசியல் கோட்டை. 2001 ஆம் ஆண்டுமுதல் அத்தொகுதியில் அவர் வென்று வருகின்றார். லிபரல் கட்சி பின்னடைவுகளை சந்தித்தவேளைகளில்கூட அத்தொகுதியில் பீட்டர் டட்டனுக்குரிய செல்வாக்கு சரியவில்லை.
இந்நிலையில் இம்முறை பீட்டர் டட்டனை, அலி பிரான்ஸ் தோற்கடித்து - அத்தொகுதியில் தனக்கான வெற்றியை உறுதிப்படுத்தி - முதன்முறையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.
49 வயதான அலி பிரான்ஸ் , கடந்த வருடம் தனது மூத்த மகனை பறிகொடுத்தார். புற்றுநோயால் அவர் உயிரிழந்தார்.
தனது 2 ஆவது மகன் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. இவ்விபத்தில் தனது மகனை காப்பாற்றுவதற்கு முற்பட்டவேளையிலேயே அலி பிரான்ஸ் தனது ஒரு காலை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல அவரது திருமண வாழ்வுகூட சோகக்கதை எனக் கூறப்படுகின்றது. தனது தனிப்பட்ட வாழ்வில் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் அரசியலில் அவர் சாதித்துக்காட்டியுள்ளார். லேபர் கட்சியின் வெற்றிக்கு சமாந்தரமாக அலி பிரான்ஸின் வெற்றியை லேபர் கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இதனை எப்படி இலங்கை அரசியலுடன் தொடர்புபடுத்தலாம் என்பது அடுத்தக் கேள்வி.
இலங்கையில் இம்முறை உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பல புதுமுக இளம் வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இது அவர்களின் அரசியல் கோட்டை, இவர்களின் அரசியல் கோட்டையென தமது வட்டாரம் தொடர்பிலேயே அவர்களில் சிலருக்கு அச்சம் இருந்தது. அதனை எவரும் வெளிக்காட்டவில்லை. தமது பிரச்சாரத்தை சரியாகவும், தன்நம்பிக்கையுடனும் முன்னெடுத்து - தமது திட்டங்களை மக்களிடம் முன்வைத்தால் உங்கள் வட்டாரம், உங்கள் கோட்டையாகும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
அதேபோல கொள்கை அரசியல்தான் என்றும் உன்னதமானது. இதனை கடந்த கால தேர்தல்கள் சிறந்த பாடத்தை வழங்கின.
அடுத்தது - ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவரின் நிலைமை அதோ கதி. சொந்த தொகுதியிலேயே அவர் மண்கவ்வியுள்ளதால் புதிய தலைவரை நியமிப்பதற்கு லேபர் கட்சி முற்படக்கூடும். நாடாளுமன்றத்தை வழிநடத்த எதிர்க்கட்சி தலைவர் தேவை.
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இரு ஜனாதிபதி தேர்தல்களில் தோற்றுள்ளார். பொதுத்தேர்தல்களிலும் அவர் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி பிரகாசிக்கவில்லை. பங்காளிகளின் உதவியாலேயே சில தொகுதிகளை வெல்ல முடிகின்றது.
எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தலென்பது சஜித்துக்கும் பலப்பரீட்சையாகவே அமையும். தேர்தல் முடிவென்பது அவரது தலைமைத்துவத்திலும் தாக்கம் செலுத்தக்கூடும். அதனால்தான் கட்சிக்குரிய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்வதற்கு தீவிரம் காட்டினார். குறைந்தபட்சம் கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்ற முடியாமல்போனால் அது பலத்த அரசியல் அடியாகவே அமையும்.
அதேபோல நாமல் ராஜபக்ச அல்லது ஏனைய அணிகளுக்குரிய வாக்கு வங்கி அதிகரிக்கும்பட்சத்தில் அது - இலங்கை அரசியலில் இனி பிரதான எதிர்க்கட்சி பாத்திரத்தை வகிக்கபோவது எந்த கட்சி என்ற சர்ச்சையையும் தோற்றுவிக்கக்கூடும்.
ஆஸ்திரேலியாவில் பீட்டர் டட்டனின் கோட்டையை லேபர் கட்சிக்கு வென்று கொடுத்து அக்கட்சியின் பெரும் பாராட்டை அலி பிரான்ஸ் பெற்றுள்ளார்.
அதேபோல அம்பாந்தோட்டையில் இருந்து சஜித் கொழும்புக்கு வந்துவிட்டார். தற்போது அவரது அரசியல் கோட்டை கொழும்புதான். அதில் பிரதான முகாம்தான் கொழும்பு மாநகரசபை.
அதனை தேசிய மக்கள் சக்தியின் பெண் மேயர் தலைமையிலான அணி வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் அலி பிரான்ஸ் லேபர் கட்சியினரால் கொண்டாடப்படுவதுபோல, தேசிய மக்கள் சக்தியினரால் விரோய் கெலீ பல்தசார் கொண்டாடப்படுவார்.
ஆர்.சனத்