ஆங்கில மொழி மோகத்தில் தமிழ் மொழியை மறந்து விடாதீர்கள்




 

வி.சுகிர்தகுமார்          

 திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட மட்டத்திலான அகில இலங்கை தமிழ் மொழி தினப்போட்டிகள் இன்று (15) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியலாயத்தில் நடைபெற்றது.
பிரதிக்கல்வி பணிப்பாளரும் கோட்டக்கல்விப்பணிப்பாளருமான க.கமலமோகனதாசன் தலைமையில் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.குலேந்திரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற தமிழ் மொழி தின அரங்க போட்டி நிகழ்வுகளில் வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் பாடசாலைகளின் அதிபர்கள் நடுவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு இடம்பெற்றதுடன் இறைவணக்கம் தமிழ்மொழி வாழ்த்துப்பா தமிழ் வாழ்த்துப்பா பாடப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் பின்னராக போட்டியின் நடைமுறைகள் மற்றும் நடுவர்களின் தீர்ப்புகள் தொடர்பில் பிரதிக்கல்விப்பணிப்பாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதேநேரம் தமிழ்மொழி தினத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் பாடசாலைகளில் இருந்து எழுமாறாக மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு முறையாக போட்டிகள் நடாத்தி சிறந்த மாணவர்களை கோட்டமட்ட போட்டிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு அதிபர்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஆங்கில மொழிக்கு வழங்கும் முக்கியத்தும் அதிகமாகவும் தமிழ் மொழிக்கு வழங்கும் முக்கியத்துவம் குறைந்து வருவதையும் தற்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. இது தவறான விடயமாகும். எப்போதும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இறுதியாக எழுத்தாக்கம் மற்றும் அரங்க நிகழ்வுகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் உடன் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.