கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கான பதிலடி இது என, இரான் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது தோஹாவில் வானில் பலத்த ஒலி எழுந்ததாக, அதை நேரில் கண்ட சாட்சியங்கள் கூறுகின்றன. இரான் ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிக்க முயற்சித்தபோது, வானில் பெரும் ஒளி ஏற்பட்டதை அதுதொடர்பான காணொளிகள் காட்டுகின்றன.
இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இந்த மோதல் அதிகரித்து வருவதால், சமீப நாட்களாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இரான் இலக்கு வைத்தது என்ன? ஏன்?
மத்திய கிழக்கின் அல்-உடெய்ட் பகுதியில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளத்தை இரானிய ஏவுகணைகள் இலக்கு வைத்தன. சனிக்கிழமை மாலை தங்கள் நாட்டின் மூன்று அணுசக்தி கட்டமைப்புகள் மீது அமெரிக்கா குண்டுவீசியதற்கான எதிர்வினை இது என இரான் தெரிவித்துள்ளது.
அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அனைத்துவித வான்வழி நடவடிக்கைகளுக்கான ராணுவ தலைமையகமாக அல்-உடெய்ட் விளங்குகிறது. அங்கு சில பிரிட்டிஷ் ராணுவ பணியாளர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர்.


Post a Comment
Post a Comment