பலஸ்தீனுக்கு ஆதரவாக பேச்சு - பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மாணவிக்குத் தடை



 


அமெரிக்காவில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசிய இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.


 








அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மாஸசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்.ஐ.டி) பட்டப் படிப்பு மாணவா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை  (29) நடைபெற்றது.


 








இந்த நிகழ்ச்சியில் அந்தக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த மாணவி மேகா வெமுரி, பலஸ்தீனத்துக்கு ஆதரவளிப்பதை வெளிப்படுத்தும் விதமாக, அரேபியா்கள் பாரம்பரியமாக அணியும் சால்வையை அடையாளமாக அணிந்து வந்தார்.


 






 அத்துடன் காஸாவில் நடைபெறும் போருக்கு எதிராக குரல் எழுப்பிய சக மாணவா்களைப் பாராட்டிய அவா், இஸ்ரேலுடன் தொடா்பு வைத்திருப்பதற்காக எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தை விமா்சித்தார்.


 






இதைத் தொடா்ந்து,குறித்த  கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை (30)  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அவருக்கு அந்தக் கல்வி நிறுவனம் தடை விதித்தது.


 






இதுதொடா்பாக குறித்த கல்வி நிறுவன செய்தித் தொடா்பாளா் ஒருவா் வெளியிட்ட அறிக்கையில், ‘கருத்து சுதந்திரத்தை எம்.ஐ.டி ஆதரிக்கிறது. ஆனால், மாணவா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தி, மேடையில் இருந்தே போராட்டத்தை வழிநடத்துவது ஏற்புடையதல்ல. எனவே, மேகா வெமுரிக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியானதே. எனினும் அவரின் பட்டப் படிப்பு சான்றிதழ் அவருக்கு வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.