சோக்கர்ஸ்' தென் ஆப்ரிக்கா சாம்பியன்ஸ் ஆனது எப்படி?



 



நிறவெறித் தடையால் நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் அந்த அணிக்கு தடை நீக்கப்பட்டது.

அந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மோதலில் மழைகுறுக்கிடவே வலுவான தென் ஆப்ரிக்கா டக்வொர்த் லிவிஸ் விதிப்படி தோல்வி அடைந்தது.

1998ம் ஆண்டு ஐசிசி சார்பில் முதல்முறையாக நடத்தப்பட்ட நாக்அவுட் கோப்பையை மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இதுதான் தென் ஆப்ரிக்கா வென்ற முதல் ஐசிசி கோப்பையாகும். அதன்பின் கடந்த 27 ஆண்டுகளாக பலமுறை போராடியும் அது தோல்வியில் முடிந்தது.

1999ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தோல்வியை தென் ஆப்ரிக்கா மறக்காது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வெல்ல வேண்டிய நிலையில் போட்டி டையில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியிருந்த காரணத்தால் அந்த அணி பைனலுக்கு முன்னேறி, தென் ஆப்ரிக்கா வாய்ப்பை இழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்ரிக்காவை தோல்வி துரத்திய நிகழ்வும், பதற்றத்தில் வெற்றியை நழுவவிடும் சோக்கர்ஸ் என்ற பெயரும் வந்தது.

2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தென் ஆப்ரிக்கா பறிகொடுத்தது.

2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. பர்படாஸில் நடந்த பைனல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 ரன்னில் தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் தென் ஆப்ரிக்க அணி ஐசிசி போட்டிகளில் பலமுறை அரையிறுதி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்டிருந்தது. 27 ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது.