பாறுக் ஷிஹான்
கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இக்கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதுடன் 34 வயதுடைய கணகர் வீதி தம்பிலுவில் 01 பகுதியை சேர்ந்த செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் இவ்வாறு கைதானவர் ஆவார்.
கைதானவர் கடந்த 2007 2008 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.அத்துடன் தற்போது அவர் பொத்துவில்-மட்டக்களப்பு வழித்தட பேருந்து சாரதியாக செயற்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் இன்று பொத்துவில் பகுதியில் இருந்து வழமை போன்று கல்முனை ஊடாக மட்டக்களப்பிற்கு செல்லும் போது கல்முனை பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த குற்றப்பலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன் அம்பாறைக்கு மேலதிக விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
பிரதேசங்களில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இனியபாரதி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு இருந்தும் இவ்வாறான குற்ற ஆவணங்களை அழிக்கும் நோக்குடன் அக்கரைப்பற்று நீதிமன்றிற்கு இவர் தீ வைத்ததாகவும் கூறப்பட்டது. .
இது தவிர, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இனியபாரதி குழுவினர் தமது உறவுகளைக் கடத்திக் காணாமலாக்கியது தொடர்பான முறைப்பாடுகளை சாட்சியங்களுடன் பலர் பதிவு செய்திருக்கின்றனர் .


Post a Comment
Post a Comment