நூருல் ஹுதா உமர்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கும் தற்போதைய பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச் அபேயரத்ன அவர்களுக்கும் இடையில் இன்று (04) அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை உப பிரதேச செயலக விடயங்களை தெளிவுபடுத்தியதுடன், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள், இடைக்கால தீர்ப்புக்கள், குறித்த செயலகத்தின் சட்ட பிரச்சினைகள், கடந்தகால முன்னெடுப்புக்கள் பற்றி தெளிவுபடுத்தி இருந்தார்.
இவற்றை கேட்டறிந்த அமைச்சர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், நீதிமன்ற கட்டளைகளுக்கும் இடையூறு வராத வகையில் தமது முன்னெடுப்புகளை எதிர்காலத்தில் செய்ய உள்ளதாகவும், இது தொடர்பில் தீர்வை பெற கலந்துரையாடல்கள் மேற்கொள்ளும்போது மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் உட்பட சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசியே தீர்வுகளை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளதாக சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மேற்குறிப்பிடப்பட்ட ரிட் மனுவில் (CA/Writ/67/2023) அப்போதைய உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர், குறித்த அமைச்சின் செயலாளர், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை பிரதேச செயலாளர் ஆகியோர் இவ் உப வடக்கு பிரதேச செயலகப் பிரிவானது 'ஒரு உப பிரதேச செயலகமாகவே உள்ளது என்றும் அமைச்சரவைத் தீர்மானம் இல்லாததன் காரணமாக இதனை பிரதேச செயலக அந்தஸ்த்துக்கு
தரமுயர்த்தப்பட முடியாது' எனவும் சத்தியக்கடதாசி சமர்ப்பித்து உறுதியாக வெளிப்படுத்தியுள்ளனர்.
நடைமுறை மற்றும் சட்ட அடிப்படை இல்லாததைக் காரணம் காட்டி இதனை தரமுயர்த்துவதற்கான எந்தவொரு நகர்வுக்கும் அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், இவ் உப பிரதேச செயலகப் பிரிவினை ஒரு முழுமையான பிரதேச செயலகமாக வெளிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாததனையும் அவர்கள் தமது சமர்ப்பிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். சமர்ப்பிப்புக்களை முறையாக பரீசிலித்த கௌரவ மேன்முறையீட்டு நீதிமன்றமானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியிட்ட இடைக்கால உத்தரவின் மூலம் இவ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரப்பட்ட இடைக்கால நிவாரணத்தை வழங்க மறுத்துவிட்டதுடன் இவ் உப பிரதேச செயலகத்தில் தனியான கணக்காளர் பிரிவை ஸ்தாபிப்பதற்கும். கணக்காளர் ஒருவரை நியமனம் செய்வதற்கும் மறுத்துவிட்டது. மேலும் மேற்கூறப்பட்ட நிலுவையிலுள்ள ரிட் மனுவைத் தவிர இப்பிரச்சினையுடன் தொடர்புடைய வேறு இரண்டு வழக்குகள் தற்போது மேன்முறையீட்டு நீதி மன்றத்தின் முன் விசாரணையில் உள்ளன.
இச்சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கும் வழக்கில் ஈடுபட்டுள்ள மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் இல்லாத நிலையில் விவாதங்களை நடாத்துவது அல்லது தீர்மானங்களை எடுப்பது நடைமுறை ரீதியாக முறையற்றதாக கருதப்படலாம். மேலும். சம்பந்தப்பட்ட அமைச்சு, அரச பொது ஸ்தாபனங்களுக்கு புதிய சட்டச் சிக்கல்களையும், சவால்களையும் உருவாக்கக் கூடும்.


Post a Comment
Post a Comment