15 இலட்சம் பெறுமதியான 12 வீடுகளும் 9 இலட்சம் பெறுமதியான 16 வீடுகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்



 


(சுகிர்தகுமார்)


 அரசாங்கத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மீள்குடியேற்ற அமைச்சினால் ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள் சக்தியின் கிளையின் முயற்சியின் பயனாக இவ்வாண்டில் 15 இலட்சம் பெறுமதியான 12 வீடுகளும் 9 இலட்சம் பெறுமதியான 16 வீடுகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு மற்றும் கோளாவில் பிரிவில் இரு வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று (04) நடப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அடிக்கல்லினையும் அவர் நாட்டி வைத்தார். நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் அரசுக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.