உலக சுற்றுலா தினம்



 




உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் திகதி 1980 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது அதன்படி இன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் வாகன தரிப்பிட வளாகத்தில் பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்கிற்காக சிறப்பிக்கப்படும் சுற்றுலாத் துறையை கொண்டாடுவதற்கு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.


இதில் ஆரம்ப நிகழ்வாக விசேட அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து வரவேற்பு செய்து நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து நானுஓயா புகையிரத நிலையம் வரை பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு குழுவினரின் இசை வாத்தியங்கள் முழங்க இவ்விழா உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.


இவ்விழாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.


குறித்த நிழ்வின்போது இன்றைய தினம் (27) நானுஓயா புகையிரத நிலையத்தில் இருந்து ரயிலில் பயணிக்க வருகை தந்த சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் நடனங்கள் அரங்கேற்றம் செய்து பின்னர் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட சிற்றுண்டியுடன் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டது.


நானுஓயா சுற்றுலா சாரதிகள் சங்கத்தினர் குறித்த நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


குறித்த நிகழ்வில் நானுஓயா புகையிரத நிலைய உயர் அதிகாரிகள், நுவரெலியா நகரின் இயங்கும் பிரசித்திப்பெற்ற சுற்றுலா விடுதி அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகள், நானுஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள், நானுஓயா நகர் அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


செ. திவாகரன்