வாகனேரி விபத்தில் மரணமடைந்த குடும்பஸ்தரின் ஜனாஷா உறவினர்களிடம் கையளிப்பு



 


வாழைச்சேனை, வாகனேரி  விபத்தில் மரணமடைந்த குடும்பஸ்தரின் ஜனாஷா உறவினர்களிடம் கையளிப்பு 


எஸ்.எம்.எம்.முர்ஷித் 


மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று மரணமடைந்த சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் பொலன்னறுவை, வெலிகந்த, நவசேனபுரயை வசிப்பிடமாகவும் முஹம்மது புஹாரி அவர்களின் ஜனாஷா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. 


குறித்த ஜனாஷா பெற்றுக்கொள்வதிலும் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்ப்பதிலும் காத்தான்குடி ஜனாஷா சேவை, கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை, கட்டுவம்வில ஜனாஷா சேவையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்ததுடன், கடுவன்வில ஜனாஷா சேவை அமைப்பினர் ஜனாஷாவை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்கான வாகன வசதியையும் செய்திருந்தனர். 


நேற்றைய தினம் (23) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி பிரதேசத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து பொலன்னறுவை, நவசேனபுர நோக்கிப்பயணித்த வேனும் வெலிகந்த பிரதேசத்திலிருந்து வாழைச்சேனை நோக்கிப்பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த கோர விபத்து இடம்பெற்றிருந்தது.


இதில், வேனின் சாரதி உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 74 வயது முஹம்மது புஹாரி என்பவர் மரணமடைந்த நிலையில், பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் தற்போது தேறி வருவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையும் தற்போது தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


குறித்த வேன் அதே திசையில் முன்னால் சென்ற பவுசர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது. 


விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியும் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.