பலஸ்தீன தூதரக அதிகாரி தாக்கப்பட்டாரா? - முஜிபுர் எம்.பி சபையில் கேள்வி



பலஸ்தீன தூதரக காரியாலயத்தின் ஊடகப் பிரிவில் பணியாற்றும் அதிகாரியொருவர் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாகப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (22) சபையில் குற்றச்சாட்டு முன்வைத்தார்.


அந்த குற்றச்சாட்டை நிராகரித்த அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, அவ்வாறு எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியில், பலஸ்தீன தூதரகத்தின் ஊடகப்பிரிவில் பணியாற்றிவரும் இளைஞன், வீட்டுக்குச் சென்றதும் அந்த பிரதேச பொலிஸார் பல தடவைகள் அவரை அழைத்து பலஸ்தீன் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை சமூகவலைத்தளங்களில் ஏன் பிரசுரிக்கிறீர்கள் என விசாரணை செய்திருக்கிறார்கள்.


அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,


‘‘இதுதொடர்பாக இதற்கு முன்னரும் நான் இந்த சபையில் தெரிவித்திருக்கிறேன். பொலிஸாரின் இந்த நடவடிக்கை சில சமயங்களில் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.


பொலிஸ் அதிகாரிகள் சிலர் இவ்வாறு செயற்படுவதற்கு அவர்கள், இஸ்ரேலிடம் பணம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பாதுகாப்புப் பிரிவிலிருக்கும் சில அதிகாரிகளுக்கு மொசாட் செலவழிப்பதாக இருக்க வேண்டும். அதனால் பலஸ்தீன் தொடர்பில் ஏதாவது செய்தி வெளியிட்டதுடன் பாதுகாப்புப் பிரிவினர், அவர்களை பின்தொடர்ந்து சென்று, அதனை நிறுத்துவதற்கு மன ரீதியில் அழுத்தம் கொடுக்கின்றனர். அவர்களை அழைத்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?’’ எனக்கேட்டார்.


அவரின் கேள்விக்கு பதிலளித்த அரசத் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளிக்கையில்,

‘‘பலஸ்தீன தூதரக காரியாலயத்தின் ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஒருவர் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்துக்கோ ஊடக அமைச்சுக்கோ அறிவிக்கப்படவில்லை. அவ்வாறான எந்தவொரு தகவலும் எமக்கு கிடைக்கவுமில்லை. எனவே பொலிஸாருடன் இதுதொடர்பில் பேசியே என்ன பிரச்சினை என அறிய வேண்டும்’’ என்றார்.