நூருல் ஹுதா உமர்
திருகோணமலை மாவட்ட முத்து நகர் விவசாயிகளின் காணி அபகரிப்புக்குட்பட்டதையடுத்து, இப்பகுதியின் பிரதியமைச்சர் இரட்டை வேடம் போட்டு வருவதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லால் மௌலவி குற்றம்சாட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முத்து நகர் விவசாயிகளின் காணி மீட்புக்கான சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இப் போராட்டக்காரர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டு போராட்டத்துக்கு ஆதரவளித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மிப்லால் மௌலவி,
“இந்த மாவட்டத்தை சேர்ந்த பிரதியமைச்சர் அரசாங்கம் பக்கம் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, மக்களின் பக்கம் இருக்கும் போது வேறு ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போட்டு வருகிறார்,” என தெரிவித்தார். தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் தற்போது அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். புல்மோட்டை தொடக்கம் குச்சவெளி மீனவர் பிரச்சினை, நில உரிமை விவகாரம் என தொடங்கிய போராட்டம் இப்போது முத்து நகர் வரை சென்றுள்ளது. கடந்த கால அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகளை வழங்கி முஸ்லிம் மக்களின் வாக்குகளை பயன்படுத்தி விட்டனர்.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகமே ஆதரவளித்தது. எனவே ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு முத்து நகர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும். ஊழல், இனவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட விடயங்களில் செயல்படும் அரசாங்கம், முத்து நகர் விவசாயிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும். கிழக்கு மாகாண சிவில் சமூகம், உலமாக்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
எதிர்வரும் ஜும்ஆ தொழுகையின் பின்னர் அனைத்து பள்ளிவாசல்களும் இணைந்து உலமா சபை வழியாக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். மேலும் சுமார் 10 ஆயிரம் கையொப்பங்களை சேகரித்து ஜனாதிபதியிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இதற்கிடையில், முத்து நகர் ஒன்றிணைந்த விவசாய சம்மேளத்தின் செயலாளர் சகீலா சபூர் தீன் கூறுகையில்,“இருபதாவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் எங்கள் விவசாய பூமியை மீட்டுத் தரக் கோரி போராடி வருகிறோம். பிரதமர் கூறிய பத்து நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இன்னும் நிறைவேறவில்லை.
இம் மாதம் 20ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்கான காலம் நெருங்கி வருவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே எங்கள் விவசாய நிலங்களை மீளப் பெற்றுத் தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். இந்த போராட்ட பந்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், கொழும்பு மாநகர உறுப்பினர் கே.ஏ. கலீலூர் ரஹ்மான் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)

Post a Comment
Post a Comment