நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவர் மூத்த உலமா அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி, அவர்களுக்கு கௌரவிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் மதனி அவர்களின் தலைமையில் மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜ.எம். றிஸ்வி முப்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது இருந்து அதன் செயலாளராகவும், உப தலைவராகவும், செயற்பட்டு வந்த அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி, அவர்கள் 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 25 வருடங்கள் தலைவராக செயல்பட்டு, அதன் வளர்ச்சிக்காகவும் சமூக, சன்மார்க்க முன்னேற்றத்திற்காகவும் பெரும் பங்காற்றியமைக்காகவே அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாகம் இவ்விழாவை ஏற்பாடு செய்து நடத்தியது.
அஷ்ஷெய்க் ஆதம்பாவா ஹஸ்ரத் கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் மௌலவி தராதரம் பெற்று மதீனா பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கிய துறையில் விசேட சித்தி பெற்றதுடன் பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணி, முதுமாணி பட்டங்களையும் பெற்றுள்ளார். கிழக்கு பிரதேசத்தில் உள்ள அரபுக் கல்லூரிகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணி புரிந்ததுடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கிய துறையின் வருகை தரு விரிவுரையாளராகவும் செயற்பட்டார்.
அம்பாறை மாவட்ட உலமா சபையின் கடந்த 25 வருட காலமாக தலைமைத்துவம் வகித்து, தேசிய, சர்வதேச சமய நல்லிணக்க மாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்பித்து அச்செயற்பாடுகளின் முன்னோடியாகவும் திகழ்கிறார். இலங்கையின் சிரேஸ்ட அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி, மற்றும் நிந்தவூர் காஷிபுல் உலூம், கல்முனை அல்-ஹாமியா ஆகிய அரபுக் கல்லூரிகளின் அதிபராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கதாகும்.
இதன்போது அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா அவர்களது சமய, சமூக மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய உன்னத சேவைகள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் மற்றும் வாழ்த்துச் செய்திகள் அடங்கிய சிறப்பு மலர் ஒன்றும் பிரதம அதிதியினால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் உலமாக்கள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், விரிவுரையாளர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், வர்த்தக சங்க தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment