முத்து நகர், முறையான தீர்வை வழங்கி அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்





 முத்து நகர் விவசாயிகளின் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தை முறையான தீர்வை வழங்கி அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி


நூருல் ஹுதா உமர் 


திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின்  விவசாய நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் விவசாய நில அபகரிப்புக்கு எதிராக தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து பிரச்சினையை அவசரமாக தீர்த்து வைக்க அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பொருளாளர் பீ.எம். நினாப் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைத்துள்ளார். 


இன்று ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதானது, குறித்த போராட்டம் பிரதமர் ஹரினி அமர சூரிய வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுவதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு நிரந்தர தீர்வை முன்வைத்து இடம்பெற்று வருகிறது. 

இலங்கை துறைமுக அதிகார சபையின் காணி என கூறி 352 விவசாய குடும்பங்களை வெளியேற்றி சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு தாரை வார்த்துள்ளதாக அங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் இரு விவசாய நீர்ப் பாசன குளங்களை மூடி சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்துக்கு வழங்கியதால் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றுக்கு தீர்வை வழங்கி மக்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தரவேண்டியது அரசின் கடமையாகும். 


கடந்த காலங்களில் அந்த மாவட்டத்தில் இருந்த எம்.பிக்கள் உச்ச அதிகாரத்தில் இருந்த காலத்தில் இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும். அவர்கள் விட்ட பிழையே மக்கள் இன்று கஷ்டப்பட காரணம். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான முழுப்பலமிக்க இந்த அரசாங்கம் முத்து நகர் காணிகளை மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும் 


1972ம் ஆண்டு காலப்பகுதியில் முத்து நகர் காணிகள் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டது  வேறு வேறு பிரதேசங்களில் இருந்து வந்து இந்த காணிகளில் மக்கள் காலகாலமாக விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனாலும் அரச வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1984ம் ஆண்டு துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த காலப்பகுதியில் திருகோணமலை மாவட்ட 16 கிராம நிலதாரி பிரிவுகளை சேர்ந்த காணிகள் துறைமுக அதிகார சபைக்கு இதன்மூலம் சொந்தமாக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்த போதிலும் 1972ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த முத்து நகர் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு விவசாய திணைக்களம் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கி அவர்களின் விவசாய நடவடிக்கையை மேம்படுத்த தேவையான சகல வசதிகளையும், சலுகைகளையும் செய்து கொடுத்துள்ளார்கள். 


கடந்த அரசாங்கங்கள் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை பெற்றது. அதன் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்ட அதிக முஸ்லிம் பிரதேசங்கள் முதன்முறையாக தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவை வழங்கினர். எனினும் துரதிஷ்டவசமாக அமைச்சரவை அமைச்சர் ஒருவர் முஸ்லிங்களுக்கு கிடைக்காமையால் அதனால் விரக்தியுற்ற மக்கள் இம்முறை உள்ளுராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய ஆணையை குறைத்து கொண்டார்கள். இந்த நிலைக்கு மக்களை தள்ளியதும், இந்த பிரச்சினையை முஸ்லிம் அரசியல்வாதிகள் கையிலெடுக்க காரணமும் அரசாங்கத்தின் போக்கே தவிர வேறில்லை. 


3:2 பெரும்பான்மையை கொண்ட பாராளுமன்றத்தையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் கொண்டுள்ள இந்த அரசாங்கம் விவசாயம் செய்து வரும் முத்து நகர் காணிகளை மக்களுக்கு கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம். இதனை விவாதப்பொருளாக வைத்துகொண்டிராமல் மக்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும். கடந்த கால ஏமாற்று அரசியல்வாதிகளை நிராகரித்தே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள். அவர்களே மக்களை வீதிக்கு வரவழைப்பது நியாயமில்லை. நாட்டையும், நாட்டு வளங்களையும் பாதுகாப்பதில் எப்போதும் அர்ப்பணிப்பு மிக்க சமூகமான முஸ்லிம் சமூகம் இருந்து வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.