\
கூகுளின் பிரபலத்திற்கு ஒரு காரணம், நாம் அதனை பயன்படுத்தும் விதத்திலிருந்து நம்மை பற்றி கற்றுக்கொள்வதாகும் என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் Human Compatible AI-க்கான மையத்தில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானியான ஜோனதன் ஸ்ட்ரே (Jonathan Stray)
பெரும்பாலும் பயனரின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்றபடி, தேடல்களின் முடிவுகளை கூகுள் வழங்குகிறது. நீங்கள் யார்? எங்கு வசிக்கிறீர்கள்? போன்றவற்றை கூகுள் தெரிந்து வைத்திருப்பதாக ஜோனதன் ஸ்ட்ரே கூறுகிறார்.
உங்களுடைய கேள்விகளுக்கு முந்தைய தேடல்களை நினைவில் வைத்துக் கொண்டு முடிவுகளை இது வழங்குகிறது. உங்களுடைய முந்தைய தேடல்களை கவனத்தில் கொண்டு தேடல் முடிவுகள் வழங்கப்படுவதன் பொருள் கூகுள் அதன் பயனர்களின் தரவுகள் பலவற்றைச் சேகரிக்கிறது என்பதுதான்.
தொடர்ந்து பேசிய அவர், "கூகுள் ஒவ்வொரு தேடலின் பதிவையும் வைத்திருப்பதோடு, கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஒரு பயனர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதையும் தெரிந்து வைத்திருக்கும். இணைப்பைத் திறந்த சிறிது நேரத்தில் ஒரு பயனர் அதனை மூடினால், அந்தப் பக்கம் பயனரின் தேடலுக்குப் பயனுள்ளதாக இல்லை என்பதை கூகுள் புரிந்துகொள்கிறது." என்று தெரிவித்தார்.
இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் அவர் விளக்கினார். "உதாரணமாக Python என்கிற கணினி புரோகிராம் மொழியை ஒருவர் தேடினால், அவருடைய முந்தைய தேடல்களில் இருந்து அவர் கணினி தொடர்புடைய தகவலைத் தேடுகிறார் என்பதை புரிந்துக் கொண்டு, அது தொடர்பான பக்கங்களையே காட்டும். Python பாம்புகளைப் பற்றிய பக்கங்களை காட்டாமல் இருக்கலாம்."
இதன் பொருள் கூகுள் நமது தேடலுக்கு ஏற்ப அது வழங்கும் முடிவுகளை தகவமைக்கிறது. அப்படியென்றால், நமக்கு உண்மையிலேயே தேவையான முடிவுகளைத் தருவதில்லை, மாறாக நாம் பார்க்க விரும்பும் முடிவுகளையே அதுவே தீர்மானித்து கொண்டு கூகுள் தருகிறது என்ற சந்தேகத்தை பலர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அத்தகைய சாத்தியக்கூறு குறைவு என்று ஜோனாதன் ஸ்ட்ரே கூறுகிறார்.
இருப்பினும் தேடல் முடிவுகளை வரிசைபடுத்துதல் அல்லது வழங்கப்படும் முடிவுகளில் மேலே இருக்கவேண்டிய பக்கம் எவை? கீழே இருக்கவேண்டிய பக்கங்கள் எவை என்பவை எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? இது குறித்து விளக்கம் சொல்லாமல் கூகுள் அமைதியாக காக்கிறது.
நிதி ஆதரவு பெற்றுகொண்டு சில நிறுவனங்கள் அல்லது இணைய உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களின் பக்கங்களை தேடல் முடிவுகளில் கூகுள் முதலில் தோன்ற செய்வதாக சிலர் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் இந்த சந்தேகத்தை நிரூபிப்பது கடினம். பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை மனதில் கொண்டு அனைத்து நிறுவனங்களும் சமூகப் பொறுப்புடன் செயல்படுவது முக்கியம் என்று ஜோனாதன் ஸ்ட்ரே கூறுகிறார். ஆனால் பல நேரங்களில் இந்த நிறுவனங்கள் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் கருதப்படுகிறது.
கூகுளின் எதிர்காலம்:

ஐரோப்பிய ஒன்றியமும் கூகுளுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது என்றாலும், இந்த முடிவு அமெரிக்க நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதால் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார் பொருளாதார மற்றும் வணிக போட்டியாற்றல் துறை நிபுணரான கிறிஸ்டினா கஃபாரா,
வெற்றிகரமான அமெரிக்க நிறுவனம் ஒன்று, உண்மையில் தவறாக நடந்து கொள்வதாகவும், அதை சரிசெய்யவேண்டும் என்று அமெரிக்காவே சொல்லும்போது விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், அது உலக அளவில் உண்மையிலேயே ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி கிறிஸ்டினா சந்தேகிக்கிறார்.
"அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, உலகின் சிறந்த அமெரிக்க நிறுவனங்களில் முதன்மையானதாக கருதப்படும் நிறுவனம் ஒன்று தவறான முறையில் செயல்படுவதாக கூறுவதால், இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது." என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், தேடுபொறி சந்தையிலும் விளம்பர தொழில்நுட்பத்திலும் மிகவும் வலுவான இடத்தைப் பிடித்துள்ள கூகுள் நிறுவனத்தை அசைப்பது சுலபமல்ல என்று கிறிஸ்டினா கஃபாரா எச்சரிக்கிறார். தற்போது வெர்ஜீனியாவில் கூகுள் மீது தொடங்கப் போகும் வழக்கு, அந்நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது.
"தொடர்ந்து பல ஆண்டுகளாக, ஐரோப்பாவில் இணையத் தேடலில் கூகுளின் சந்தைப் பங்கு 98 சதவீதமாக இருந்தால், அது அமெரிக்காவில் 93 சதவீதமாக உள்ளது. இப்போதும் அந்த நிலை மாறவில்லை. எனவே வலுவாக இருக்கும் கூகுளின் இடத்தை யார் பிடிப்பார்கள் என்பதுதான் கேள்வி. விளம்பர தொழில்நுட்பம் மற்றும் விளம்பர நிறுவனங்கள் பெரும்பாலும் கூகுளையே சார்ந்து உள்ளன. நாம் இணையத்தில் திறக்கும் ஒவ்வொரு வலைத்தளம், விளம்பரங்களைக் கொண்ட ஒவ்வொரு பயன்பாடு பற்றிய நமது அன்றாட அனுபவம் அடிப்படையில் ஏதோ ஒரு வகையில் கூகுளின் மூலம் இயக்கப்படுகிறது." என்கிறார் கிறிஸ்டினா.
தொடர்ந்து பேசிய அவர், "தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதித்துவிட்டோம். இது உலக அரசியலின் ஒரு பகுதி. இப்போது அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம், ஏனென்றால் இந்த நிறுவனங்கள் வேறு நிறுவனங்களை வாங்குவதன் மூலம் ஏகபோகத்தைப் பெற்றுவிட்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடுகிறது." என்றும் தெரிவித்தார்.
இது அரசாங்கங்களின் தவறு என்று கிறிஸ்டினா கூறுகிறார். ஒரு புவிசார் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்படுவதற்கு அனுமதித்துவிட்டோம். கூகுளின் சந்தைப் பங்கை குறைக்க அதன் போட்டி நிறுவனங்கள் என்ன செய்யும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
ஆப்பிள் ஒரு தேடுபொறியைத் தொடங்கப் போகிறதா? இல்லை. அதேபோல், பிங் என்றென்றும் மைக்ரோசாப்டின் இயந்திரமாக இருந்து வருகிறது, பிங்கில் AI அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட, சந்தைப் பங்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, கிறிஸ்டினாவின் கருத்துப்படி, கூகுள் ஒரு ஏகபோக ஆதிக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஆனால், இந்தக் கூற்றை மறுக்கும் கூகுள் நிறுவனம், போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகக் கூறுகிறது. இருப்பினும், கூகுள் சர்ச், அதனுடன் போட்டியிடும் சர்ச் எஞ்சின்களை விட சிறந்தது என்பதை அமெரிக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதும் உண்மை.
இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றம் கூகுளுக்கு என்ன தண்டனை அளிக்கிறது என்பதை முடிவு செய்ய நேரம் எடுக்கும். ஆனால் நீதிமன்றத்தின் முடிவு பாதகமாக இருந்தால், மேல்முறையீடு செய்யப்போவதாக கூகுள் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் கென்ட் வாக்கர் கூறியுள்ளார்.
பிபிசி தமிழ் இணையதளம் மற்றும் யூ-டியூப் பக்கத்தில் ஒலி மற்றும் ஒளி வடிவில் வெளியாகும் உலகின் கதை என்கிற தொடரில் வெளியான ஒரு பாகத்தின் கட்டுரை வடிவம் இது.


Post a Comment
Post a Comment