நஷீம் ஷா வீட்டில் துப்பாக்கிச் சூடு - இன்று இலங்கைக்கு எதிராக பங்கேற்கிறார்!





பாக்கிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் பகுதியில் உள்ள வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், சந்தேகநபர்கள் நஷீம் ஷாவின் வீட்டின் வாயில் கதவை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக நஷீம் ஷாவின் தந்தை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.


இந்நிலையில், இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் போட்டிகளில் பங்கேற்பதற்காக நஷீம் ஷா தற்போது ராவல்பிண்டியில் தங்கியுள்ளார். சம்பவம் அவரது கிரிக்கெட் தொடரில் பங்கேற்புக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என பாக்கிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.


மேலும், அவர் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.