நூருல் ஹுதா உமர்
கல்வி அமைச்சு மற்றும் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தை பாடசாலை ஆரம்பத்திற்கு தயார்படுத்தும் வகையில் சாய்ந்தமருது–மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினரால் சிரமதானம் ஒன்று இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்ற இச்சிரமதானத்தில் பாடசாலை வளாகத்தின் சுற்றுப்புற சுத்திகரிப்பு, தேங்கியிருந்த குப்பைகள் அகற்றல், நடைபாதைகள் சீரமைத்தல், நீர் வடிகால் பகுதிகள் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அண்மைய காலநிலை பாதிப்புகளால் ஏற்பட்டிருந்த அசுத்தங்களை அகற்றி, மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சாய்ந்தமருது–மாளிகைக்காடு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டு தன்னார்வமாக பணியாற்றினர். சமூக பொறுப்புணர்வுடன் கல்வி நிலையங்களை பாதுகாப்பதும், மாணவர்களின் நலனை முன்னிறுத்துவதும் தங்களின் கடமை என சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இத்தகைய சமூக ஒத்துழைப்புக்கு நன்றியினை தெரிவித்து, அரச சுற்றுநிருபத்திற்கிணங்க பாடசாலை ஆரம்பம் சிறப்பாக நடைபெற இது பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.
இந்த சிரமதான பணியில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா, உறுப்பினர்கள், பாடசாலை கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment