நூருல் ஹுதா உமர்
பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறையினரால் விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா அவர்களின் நேரடி ஆலோசனையின் பிரகாரம், புதன்கிழமை இரவு பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
உடங்கா, விழினயடி, கல்லரிச்சல் மற்றும் மலையடி ஆகிய சுகாதார பிரிவுகளுக்கு உட்பட்ட 12 இரவு நேர உணவகங்கள் (டேஸ்ட் கடைகள்) இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், உணவகங்களின் பொதுவான சுகாதார நிலை திருப்திகரமான முறையில் முன்னேற்றமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் சில உணவகங்களில் உரிய மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவகங்களை நடத்தியமை, பணியாளர்கள் உணவு கையாளும் போது தலையை மறைக்காமை மற்றும் ஏப்ரன் அணியாது பணியாற்றியமை போன்ற விதிமீறல்கள் அவதானிக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகளை அலட்சியம் செய்த இரண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதே இவ்வாறான சுற்றிவளைப்புகளின் பிரதான நோக்கமாகும் எனவும், உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சுகாதார விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவது கட்டாயமானதாகும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.


Post a Comment
Post a Comment