வெளிநாடு வாழ் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான விசேட மருத்துவ முகாம்



 


நூருல் ஹுதா உமர்


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) அனுசரணையுடன், சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான விசேட மருத்துவ முகாம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பிரபா சங்கர் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமின் போது, பயனாளிகளுக்குப் பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. இதன் கீழ் பொது வைத்திய பரிசோதனைகள், விசேட மருத்துவ ஆலோசனைகள், பற்சுகாதார பரிசோதனைகள் உள்ளிட்ட சேவைகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் அதிதிகளாகவும், மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நிபுணர்களாகவும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹீர், டாக்டர் (திருமதி) எம்.ஐ. நஸீரா, பல் வைத்திய நிபுணர் எம்.எம். பைரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விசேட மருத்துவ முகாமினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரிதும் பயனடைந்தனர்