ஆறாம் மாதக் கொடுப்பனவையும் மக்களுக்கே அன்பளிப்புச் செய்த நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ. நளீர்



 


நூருல் ஹுதா உமர்


பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றம், பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய துறைகளில் அதீத அக்கறையுடன் செயல்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர், தமக்கு பிரதேச சபை உறுப்பினராக கிடைத்த ஆறாம் மாதக் கொடுப்பனவையும் வாக்குறுதிக்கிணங்க மக்களுக்கே அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அதன்படி, குளத்தடி ஐந்தாம் கிராமத்தில் வசித்து வரும் வசதி அற்ற ஒரு குடும்பத்திற்கு இம்மாதக் கொடுப்பனவு முழுமையாக அன்பளிப்புச் செய்துள்ளார். இச்சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர்,

“தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, எனக்கு கிடைக்கும் மாதாந்த கொடுப்பனவுகளை பொதுமக்களுக்கே வழங்குவேன் என உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறேன். எனது பதவிக்காலம் முழுவதும் கிடைக்கும் சகல மாதக் கொடுப்பனவுகளும் தேவையுடைய மக்களுக்கே வழங்கப்படும்,” என தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றம், அபிவிருத்தி மற்றும் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தி, நளீர் பௌண்டஷன் தலைவர் மற்றும் இலங்கை அடிப்படை உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளராக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தேன். அதன் பயனாகவே, மக்கள் தாம் தொடர்ந்தும் வாக்களித்து வந்த அரசியல் கட்சிகளை புறக்கணித்து அதிக வாக்குகளுடன் என்னை தமது பிரதிநிதியாக பிரதேச சபைக்கு அனுப்பியுள்ளனர்,” என்றார்.

தொடர்ந்து அவர், “நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினராக ஆசனத்தை சூடாக்காமல், மக்களின் குரலாக ஒலித்து வருகிறேன். மக்களுக்கு சேவையாற்றும் பணியை இடைநிறுத்தாமல் தொடர்வேன். அதன் ஒரு பகுதியாகவே மாதாந்த கொடுப்பனவுகளையும் தேவையுடைய மக்களுக்கே அன்பளிப்பாக வழங்கி வருகிறேன்,” எனவும் தெரிவித்தார்.