முன்னாள் அமைச்சர் 'சொல்லின் செல்வர்' செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
தலைசிறந்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவர் 1956 முதல் 1989 வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ,ஊடகவியலாளராகவும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும்பணியாற்றினார்.
இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.
தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.
இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார். பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து சென்னையில் வாழ்ந்து வந்தார் .
அவரது மறைவுக்கு கொழும்பு சாயி மத்திய நிலையம் அனுதாபத்தைதெரிவித்துள்ளது.
இறுதிக்கிரிகைகள் சென்னையில் நடைபெறவுள்ளது.


Post a Comment
Post a Comment