ஜவ்பர்கான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் இரு வாரத்தில் 36 டெங்கு நோயாளர்கள்
மக்கள் அவதானம்!
ஜவ்பர்கான் மட்டக்களப்பு
நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவல் காணப்படும் அதேசமயத்தில் மட்டக்களப்பில் இருவாரத்தில் 36 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டின் ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம்; 11ஆந் திகதி வரையுமான முதல் இரு வாரங்களில் இம்மாவட்டத்தில் பல பாகங்களிலுமிருந்து மொத்தமாக 36 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாரம் வரை டெங்கு தாக்கத்தினால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்சமாக 20 பேர் டெங்கு நோயினால் பாதிப்புக்குள்ளானர். அதேபோல் செங்கலடி பிரதேசத்தில் 06 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேரும் களுவாஞ்சிக்குடி, கிரான், ஓட்டமாவடி, வாகரை, வவுனதீவு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 36 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காத்தான்குடி, ஏறாவூர், கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் இவ்வாண்டின் முதல் இரு வாரங்களிலும் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
மேலும் கடந்த சில வாரங்களின் அவதானத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தவபாலசூப்பிரமணியம் சரவணன்; மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். இருப்பினும் கடந்த டிசம்பர் மாதம் 71 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் குறிப்பாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகள் மற்றும் சுற்றுச் சூழலில் தேங்கியிருக்கும் குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Post a Comment
Post a Comment