விண்வெளி ஆய்வுக்கான நிதி குறைகிறது: ரஷ்யா சிக்கன நடவடிக்கை




விண்வெளி ஆராய்ச்சிக்கு தாம் செலவு செய்யும் நிதியில் பெருமளவான குறைப்புகளை ரஷ்யா அறிவித்துள்ளது.
உலக சந்தையில் பெட்ரோலிய எண்ணெய்யின் விலை விழுந்துவருவதால் ரஷ்யாவுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுவர, பலவித சிக்கன நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தயாராகிவரும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ரஷ்யா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது இரண்டாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டுவரை ஒத்திப்போடப்பட்டுள்ளது.
திரும்பத் திரும்பப் பயன்படுத்தவல்ல ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது புதிய தலைமுறை ராக்கெட்டுகளை ஏவுவதற்காக உருவாக்கிவரும் காஸ்மோடிரோன் மையத்தில் இரண்டுக்கு பதிலாக ஒரு ராக்கெட் ஏவுமேடையே கட்டப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யா தனது ராக்கெட்டுகளை ஏவுவதற்கு கஸக்ஸ்தானில் உள்ள காஸ்மோடிரோனையே வாடகைக்கு பயன்படுத்திவருகிறது.