காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் காப்பாளர் இடைநீக்கம்



இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பொறுப்பாளர் ஜயந்த வர்ணவீரவை சர்வதேச கிரிக்கெட் பேரவை மூன்று வருடங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடித் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்காததன் காரணத்தினாலேயே அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேர்முக விசாரணையில் கலந்துக்கொள்ளும்படி வர்ணவீரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு சந்தரப்பங்களில் அவர் விசாரணைக்கு வரவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு விசாரணையுடன் தொடர்புடைய ஆவணங்களை சமர்பிக்க அவர் தவறியுள்ளார் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த தீர்மானம், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதான காப்பாளர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.