புத்தாக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்குத் தேவையான சந்தை வாய்ப்புக்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான புத்தாக்க ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் வழிகாட்டலின்கீழ் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகின்றது.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த புத்தாக்குநர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.
2013 ஆம் ஆண்டின் சிறந்த புத்தாக்கத்திற்காக தேங்காய் மட்டையிலிருந்து தும்பு உற்பத்தி செய்வதற்கான இயந்திரத்தை அறிமுகப்படுத்திய ஏ.பி.எஸ். லக்ஸ்மன் விஜேசிங்கவுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டதுடன், 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த புத்தாக்கத்திற்கான ஜனாதிபதி விருது உயிரோட்டமுள்ள கால் ஒன்றுக்கு நிகரான செயற்கைக் காலை உருவாக்கிய நிலான் சதுரங்க லொக்கு ஹெட்டிகேவுக்கு வழங்கப்பட்டது.
