வியாழனை வென்றது விஞ்ஞானம்: சாதித்தது ஜூனோ விண்கலன்




அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆராய அனுப்பிய ஜுனோ விண்கலன் வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
சுமார் 100 கோடி அமெரிக்க டாலர் செலவுக்குப்பின் இந்த விண்கலன் ஐந்தாண்டுகள் பயணித்து அங்கே சென்றுள்ளது.
2011 ஆம் ஆண்டு வியாழனை நோக்கி ஜூபிடரை நோக்கி பயணிக்கத்துவங்கிய ஜூனோ விண்கலன், சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழனின் ஈர்ப்பு சக்தி மண்டலத்தால் பிடிக்கப்பட ஏதுவாக, தனது இயந்திரத்தை 35 நிமிடங்கள் வரை இயக்கி, தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது.
அதைத் தொடர்ந்து அது வியாழனின் ஈர்ப்புசக்தியால் ஈர்க்கப்பட்டு, அதன் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது.
சுமார் 800 மிலியன் கிலோமீட்டர் தொலைவில் இந்த சாதனை நடந்ததைக் காட்டும் ஒலி சமிக்ஞைகளை ஜூனோ பூமிக்கு அனுப்பியபோது, நாசா விஞ்ஞானிகள் பெரும் ஆரவாரம் செய்தனர்.
ஜூனோ விண்கலன் வியாழன் கிரகத்தை அடுத்த ஒன்றரை ஆண்டு சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனது பணி முடிந்த பின்னர் அது வியாழன் கிரகத்தின் வான் சூழலில் குதித்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.