இலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர

தென்கிழக்காசிய நாடுகளில் எழுத வாசிக்கத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை வீதம் கூடியதாக விளங்கும் நாடு இலங்கையென கடந்த நூற்றாண்டு முதல் பேசப்படுகின்றது. இந்த மகத்தான பெருமை நம் நாட்டுக்கு கிடைப்பதற்குக் காரணம் இங்கு நிலவும் இலவசக் கல்வியென்பதேயாகும். இச்சிறப்பு வாய்ந்த இலவசக் கல்வி தொன்றுதொட்டு வழங்கப்பட்டதன்று. வசதியுடையோர் மாத்திரமே கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற வறுமையில் உழன்ற மக்கள் கல்வியறிவற்றவர்களாகவே வாழ்ந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரச நிருவாக சேவைகளுக்கு ஆங்கில அறிவுடையோரின் தேவை கருதியும் பெருந்தோட்ட முகாமைத்துவம் கருதியும் பாடசாலைகள் இயங்கின. இங்கெல்லாம் கிராமிய மக்களோ பெருந்தோட்டத் தொழிலாளர்களோ பெரிய அளவில் பிள்ளைகளை கல்விக்காக அனுப்புவதற்கு வசதியற்றவர்களாயினர்.

எனினும் 1931 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரையிலான சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி சி. டப்ளிவ். டப்ளிவ் கன்னங்கரா அவர்களினால் இலவசக் கல்வித் திட்டம் அமுல்படுத்தப்பட்டு கல்விப் பொதுவுடைமை மலர்ந்தது. அதன் காரணமாகவே எழுத வாசிக்கத் தெரிந்த மக்கள் அதிகமாக வாழும் நாடென்ற பெருமை இலங்கைக்குக் கிட்டியது.


நலிவுற்ற பொருளாதார நிலையுடன், போக்குவரத்து வசதி குன்றிய சிரமங்களையும் அனுபவித்து விடாமுயற்சியுடன் கற்று தேர்ந்தவர்களுக்கு கல்வியின் பெறுமதி புலப்படும். கன்னங்கரா அவர்கள் காலி மாவட்டத்தில் பலப்பிட்டிய – ரந்தொம்ப கிராமத்தில் ஏழைக் குடும்பமொன்றில் பிறந்து பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து கல்வி கற்றமையினால் தாம் அனுபவித்த சிரமங்களை எதிர்கால சிறார்கள் அடையக்கூடாதெனக் கருதினார். வசதி படைத்தவர்களினால் ஏற்படும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து தமது கனவை நனவாக்கிட தாம் கற்று தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியத்தை திடசங்கற்பமாக மேற்கொண்டார்.

நாம் ஆபிரகாம் லிங்கனைப் பற்றியும், அம்பேத்கார் பற்றியும் பெருமையடைகிறோம். ஆனால் எமது நாட்டிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து தமது சமூகத்தின் எதிர்காலத்திற்காக விடாமுயற்சியுடன் வெற்றிகண்டவர்களும் உண்டென்பதை கன்னங்கரா போன்றோரின் வரலாறுகள் மூலம் காண முடிகிறது.

தமது சொந்த ஊரின் கிராமத்து பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த பரிசளிப்பு விழாவுக்கு தென் பிராந்தியத்தின் சிறப்புமிக்க கல்லூரியாகிய ரிச்மண்ட் கல்லூரியின் அதிபராகவிருந்த வண. பிதா ஸ்டோன் டெறல் விசேட அதிதியாக வருகை தந்திருந்தார். மாணவர்களில் அதிகமான பரிசில்களை வாரிச்சென்ற மாணவன் கன்னங்கராவைப் புகழ்ந்து தமது கல்லூரியில் இணைந்துகொள்ள புலமைப் பரிசில் பரீ்ட்சைக்கு இம் மாணவனை தோற்றுமாறு கூறினார். குறிப்பிட்ட புலமைப் பரிசில் பரீ்ட்சையில் மாகாணத்திலேயே முதல் மாணவனாக தேர்வானான் மாணவன் கன்னங்கரா.

பணக்காரர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் ரிச்மண்ட் கல்லூரியில் ஏழைச் சிறுவனாகிய கன்னங்கராவுக்கு எத்தனையோ அவமானங்கள், கேலி கிண்டல்களென வாரியிறைக்கப்பட்டன. அனைத்தையும் பொறுமையுடன் சமாளித்து படிப்பில் அக்கறை செலுத்திய கன்னங்கரா, முதலாம் தவணைப் பரீட்சையில் இலத்தீன் மொழி பாடத்தில் சோபிக்காத காரணத்தினால் கிண்டல்களுக்குள்ளானான். விடாமுயற்சியுடன் படித்து இரண்டாம் தவணைப் பரீ்ட்சையில் மூன்றாம் இடத்தையும் மூன்றாம் தவணைப் பரீட்சையில் முதலாம் இடத்தையும் பெற்றான்.

1903ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சைக்குத் தோற்றிய கன்னங்கரா, பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகளிலேயே அதிக புள்ளிகளைப் பெற்ற முதலாம் மாணவனாக தெரிவானான். இதனால் காலி ரிச்மண்ட் கல்லூரியின் பெருமை உலகளாவிய ரீதியில் பரவியது.

காலி ரிச்மண்ட் கல்லூரி படிப்பை வெற்றிகரமாக பூர்த்திசெய்த இளைஞனாகிய கன்னங்கரா வித்தியாலய அதிபராகிய பாதிரியாரின் வேண்டுகோளையேற்று அதே கல்லூரியில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டதோடு தொடர்ந்து பல்கலைக்கழக கல்வியையும், சட்டக் கல்வியையும் பயின்று சிறப்பாக தேர்வடைந்து 1910 ஆம் ஆண்டு வழக்கறிஞராக தொழில் புரிந்தார். இக்காலகட்டத்தில் 1915 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அப்பாவிகளான சிங்கள தலைவர்களுக்காக இலவசமாக வாதாடினார்.

வறுமையில் வாடிய மக்களுக்காக பொது அமைப்புகள் மூலம் பணியாற்றியும் ஏழை மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் பணிகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த கன்னங்கரா; 1923 ஆம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் மூலம் காலி தொகுதியின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதோடு 1931 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டொனமூர் அரசியல் சட்டத்தின் பிரகாரமும் காலி தொகுதியின் உறுப்பினரானார்.

இக்காலத்தில் கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் கல்வி அமைச்சராக நியமனம் பெற்றார். இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் என்னும் சிறப்பு இதன் மூலம் சி. டப்ளிவ். டப்ளிவ் கன்னங்கரா அவர்களைச் சார்ந்தது. 1947 ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணியாற்றிய போது தமது நீண்ட நாளைய கனவான இலவசக் கல்வியை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமுல்படுத்தி சகல தரத்தினரும், சகல இனத்தினரும் இலவசமாக கல்வி கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி இலங்கையின் இலவசக் கல்வியின் பிதாவென போற்றப்பட்டார்.

சகல பாடசாலைகளிலும் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட வலியுறுத்தியதோடு இலவச மதிய உணவு திட்டத்தையும் அமுல்படுத்தினார். புத்தகங்களைக் கொண்டு கற்பித்தலோடு பயிற்சி முறையிலான கல்வி முறைகளை பாடசாலைகளில் கடைப்பிடித்தல் அவசியமென நிபந்தனை விதித்தார். கற்றோராகவும் நற்பிரஜைகளாகவும் இலங்கையர் திகழவேண்டுமென அடிக்கடி வலியுறுத்திய அமைச்சர் கன்னங்கரா, மத்திய மகா வித்தியாலய கல்வித் திட்டத்தினைக் கொண்டு வந்ததன் மூலம் நகர்ப்புறங்களுக்கும், வசதியானவர்களுக்கும் மட்டுப்பட்டிருந்த கல்வி வாய்ப்புகளை கிராமப்புறங்களுக்கும் எடுத்துச் செல்வதில் வெற்றி கண்டார்.

1944 ஆம் ஆண்டு இலங்கை வந்த காலனித்துவ நாடுகளுக்கான செயலாளர் நாயகம் டப்ளிவ். எம். க்ளைட், கன்னங்கரா அவர்களின் பாடசாலை வீட்டுத் தோட்ட திட்டத்தினை வெகுவாக பாராட்டியதோடு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குட்பட்ட அனைத்து நாடுகளிலும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுத்தார்.

1947 ஆம் ஆண்டு தேர்தலில் மத்துகம தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற அவர், 1950 ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டார். மீண்டும் 1952 ஆம் ஆண்டு தேர்தலில் அகலவத்தை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளூராட்சி அமைச்சரானார். இவரது நிருவாக காலத்திலேயே உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகளவு அரச நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1956ஆம் ஆண்டு அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்ற சி. டப்ளிவ். டப்ளிவ் கன்னங்கரா; முழுநேர மக்கள் பணியாளராகவே காலத்தைச் செலவிட்டமையினால் தமக்கென எவ்வித சொத்துக்களையும் தேடிக்கொண்டிருக்கவில்லை. இளமைக் காலத்தில் தாம் அனுபவித்த வறுமையை விட மிக மோசமான ஏழ்மை நிலைக்குள்ளானார். வறுமையின் கோரப்பிடியினால் செய்வதறியாது தவித்த இந்த முன்னாள் அமைச்சர் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். “என்னால் வறுமையைத் தாங்க முடியவில்லை. ஏதாவது உதவி புரியுங்கள்” என்றிருந்தது அந்த கடிதம்.

1965 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசு; கன்னங்கரா அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அவருக்கு ஓய்வுப் பணம் வழங்கியது. ஸ்ரீ லங்கா ஜனநாயக சோஷலிச குடியரசின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்து வரும் ஓய்வூதிய நடைமுறை இதன் மூலமே ஆரம்பிக்கப்பட்டது.

தமக்கென வாழாது நாட்டு மக்களின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த இலவசக் கல்வியின் பிதா சி. டப்ளிவ். டப்ளிவ் கன்னங்கரா 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி காலமானர்.